15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் டெல்லியில் உபயோகிக்க தடை விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதனால் டெல்லி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தீர்ப்பாயத்தின் தலைவர், நீதிபதி ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது, ” தலைநகரில் காற்று மாசுபாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதில் சந்தேகத்திற்கு இடமே இல்லை. இது, காற்று மாசுபாட்டுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெளிவாகக் காண்பிக்கிறது.
15 ஆண்டுகளாகவோ அல்லது அதற்கும் மேற்பட்டோ இயங்கி வரும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினர் சட்டத்துக்கு உள்பட்டு, நோட்டீஸ் அனுப்புதல், வாகனங்களை பறிமுதல் செய்தல் போன்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.