பாவங்கள் அதிகமாவதால்தான் கோவில்களில் வருமானம் அதிகமாகிறது. சந்திரபாபு நாயுடு
கோவில்களில் வருமானம் அதிகரித்து வருவது கவலைக்குரிய ஒரு விஷயம் என்றும் மக்கள் தங்கள் பாவங்களை தொலைக்கவே கோவில்களில் காணிக்கைகள் செலுத்துவதால் கோவில்களில் வருமானம் அதிகரிப்பது பாவங்கள் அதிகமாவதையே காட்டுகிறது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் நேற்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்களுக்கான கருத்தரங்கு ஒன்றில் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு “ஆந்திர கோயில்களின் வருமானம் 27 சதவீதம் அதிகரித்துள்ளது. மக்கள் பாவங்களைச் செய்துவிட்டு, அதனை தொலைப்பதற்காக கோயில்களுக்கு செல்கின்றனர். அங்கு காணிக்கையும் செலுத்துகின்றனர்’ என்று கூறினார். அதே நேரத்தில் “கோயிலுக்கு விரதமிருக்கும் பக்தர்களால், மது விற்பனை குறைகிறது; இதனால், அரசுக்கு வருமானமும் குறைகிறது’ என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறியதாவது: ஆந்திர மாநிலம், தற்போது 2 வயது குழந்தையாக இருக்கிறது. வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் முதல் மூன்று மாநிலங்களில் ஒன்றாக ஆந்திரத்தை உருவாக்க வேண்டும். 2029-ஆம் ஆண்டுக்குள் முதலிடத்தை அடைய வேண்டும். அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டு, நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்’ என்று கூறினார்.
.