மாநிலங்களவையை அடுத்து மக்களவையிலும் நிறைவேறியது ஜிஎஸ்டி. அதிமுக வெளிநடப்பு

மாநிலங்களவையை அடுத்து மக்களவையிலும் நிறைவேறியது ஜிஎஸ்டி. அதிமுக வெளிநடப்பு

gst billமாநிலங்களவையில் கடந்த வாரம் ஜிஎஸ்டி மசோதா எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேறியது போல நேற்று மக்களவையிலும் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது. எதிர்க்கட்சிகள் கூறிய ஒருசில திருத்தங்களை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதை அடுத்து காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தன. அதேபோல் இந்த மசோதாவின் வாக்கெடுப்பின்போது மாநிலங்களையில் அதிமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தது போல், மக்களவையிலும் நேற்று வெளிநடப்பு செய்தனர்.

முன்னதாக இந்த மசோதா குறித்த விவாதத்தில்பேசிய அதிமுக எம்.பி.க்கள், ஜிஎஸ்டி சட்டம் அமலாக்கப்பட்டால் தமிழகத்துக்கு ஆண்டுதோறும் ரூ.9 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று கவலை தெரிவித்தனர்.

மசோதா நிறைவேறிய பின்னர் பிரதமர் மோடி நன்றி தெரிவித்து பேசியதாவது: “வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் மூலம் இந்திய தேசத்தின் விடுதலை வேள்வியை கடந்த 1942-ஆம் ஆண்டில் அண்ணல் காந்தியடிகள் தொடங்கியது இதே நாளில்தான் (ஆக.8). வரலாற்றில் மறக்க முடியாத இந்த தினத்தில் மற்றொரு சிறப்பு நிகழ்வாக ஜிஎஸ்டி மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது மத்திய அரசுக்கோ, குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கோ கிடைத்த வெற்றியல்ல. இது அனைவருக்குமான வெற்றி. குறிப்பாக இந்திய ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி’ என்று கூறினார்

அதிமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தபோதிலும் மக்களவையில் இருந்த 443 உறுப்பினர்கள் இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்ததை அடுத்து திருத்தப்பட்ட ஜிஎஸ்டி மசோதா ஒருமனதாக மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply