சிகரெட் மீதான வரி 28% உயர்வு: ரூ.5000 கோடி கூடுதல் வருமானம்
சிகரெட் மீதான கூடுதல் வரி விதிப்பை உயர்த்த எடுக்கப்பட்ட முடிவைத் தொடர்ந்து இன்று முதல் சிகரெட் விலை உயர்கிறது.
சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான 19வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. அதில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமை வகித்தார். மாநில நிதி அமைச்சர்கள் கலந்து கொண்டனர். தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக சென்னையில் இருந்தபடி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்த கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு பேசிய அருண் ஜெட்லி கூறுகையில், சிகரெட் மீதான கூடுதல் வரி விதிப்பை 28 சதவீதம் உயர்த்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவைத் தொடர்ந்து நாடு முழுவதும் சிகரெட் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கூடுதல் வரி விதிப்பு காரணமாக அரசுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி வரை கூடுதல் வருவாய் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விலை உயர்வால், 65 மி.மீ அளவுள்ள ஆயிரம் சிகரெட் கொண்ட பண்டல் ஒன்றிற்கு ரூ.485 உயர்கிறது. 65 முதல் 70 மி.மீ அளவு கொண்ட 1000 சிகரெட் கொண்ட பண்டல் ஒன்றிற்கு ரூ.621 எனவும், 70 முதல் 75 மி.மீ அளவு கொண்ட 1000 சிகரெட் கொண்ட பண்டல் ஒன்றிற்கு ரூ.792 எனவும் உயர்த்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.