ஆந்திர மாநிலத்தில் விநாயகர் சதுர்த்திக்கு தயாரித்த 8 டன் எடை கொண்ட ‘மெகா லட்டு’ பிரசாதம் இந்த ஆண்டும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து 5-வது ஆண்டாக இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் தாபேஸ்வரம் பகுதியில் உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயா ஸ்வீட்ஸ் உரிமையாளர் எஸ். வெங்கடேஸ்வர ராவ், கடந்த 5 ஆண்டுகளாக ஹைதராபாத், விசாகப்பட்டினம், விஜயவாடா ஆகிய நகரங்களில் விநாயக சதுர்த்திக்கு மெகா லட்டு பிரசாதங்களை தயாரித்து வழங்கி வருகிறார்.
இவர் கடந்த 2011-ம் ஆண்டில் 5,570 கிலோ, 2012-ல், 6,599 கிலோ, 2013-ல் 7,132 கிலோ, 2014-ல் 7,858 கிலோ எடை கொண்ட லட்டு பிரசாதங்களை தயாரித்து விநாயகர் சதுர்த்திக்கு வழங்கினார். இவை அனைத்தும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றன. இந்த வரிசையில் இந்த ஆண்டு 8,369 கிலோ எடையில் லட்டு பிரசாதம் தயாரித்து வழங்கினார். இந்த லட்டு, விசாகப்பட்டினத்தில் காஜுவாகா பகுதியில் வைக்கப்பட்ட 80 அடி விநாயகர் சிலையின் கையில் வைக்கப்பட்டு, பின்னர் அது பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
இந்த மெகா லட்டு பிரசாதமும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் 5 முறையாக இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து கடை உரிமையாளர் எஸ்.வெங்கடேஸ்வர ராவ் கூறும்போது, “நாங்கள் தயாரித்து வழங்கிய லட்டு பிரசாதங்கள் தொடர்ந்து 5 ஆண்டுகளாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்று வருவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக உழைத்த ஊழியர்களை வெகுவாக பாராட்டுகிறேன். அடுத்த ஆண்டு 500 கிலோ பால்கோவா செய்து அந்த பிரசாதத்தை மகாராஷ்டிர மாநிலம் சீரடி சாய்பாபா கோயிலுக்கு வழங்க உள்ளோம்” என்றார்.