ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிலத்தை மகளுக்கு ரூ.60,000க்கு தாரை வார்த்த முதல்வர்.
குஜராத் முதல்வராக இருந்த நரேந்திரமோடி, இந்தியாவின் பிரதமராக பதவியேற்று கொண்ட பின்னர் அவருக்கு பதிலாக குஜராத் முதல்வராக பதவியேற்றவர் ஆனந்தி பென் பட்டேல் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் நரேந்திரமோடி முதல்வராக இருந்தபோது அமைச்சராக இருந்த ஆனந்த்பென், தனது மகளுக்கு குறைந்த விலையில் 250 ஏக்கர் நிலத்தை முறைகேடாக விற்பனை செய்ததாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த்சர்மா புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
2010-ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, ஆனந்தி பென் படேலின் மகள் அனார் படேலுடன் தொழில்ரீதியாக தொடர்பில் இருந்த ஒரு நிறுவனத்துக்கு கிர் சிங்கங்கள் சரணாலயத்துக்கு அருகேயுள்ள இடத்தில் ஓர் ஏக்கர் ரூ.60,000 என்ற விலையில் 250 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அப்பகுதியில் ஓர் ஏக்கர் நிலத்தின் சந்தை மதிப்பு ரூ.50 லட்சமாகும்.
நில ஒதுக்கீட்டில் மோடி தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளது தெரிகிறது. அனார் படேலுக்கு வேண்டப்பட்ட நிறுவனம் என்பதால்தான் குறைந்த விலையில் வனப்பகுதி நிலத்தை குஜராத் அரசு விற்பனை செய்துள்ளது. இந்த நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டபோது ஆனந்தி பென் படேல் குஜராத் மாநில வருவாய்த் துறை அமைச்சராக இருந்தார். இப்போது அவர் முதல்வராகவும் உள்ளார்.
தனது ஆட்சியில் ஊழலுக்கு சிறிதும் இடமில்லை என்று பேசி வரும் மோடி, இந்த விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்? பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி எழுப்பும். அப்போது இது தொடர்பாக மோடியிடம் நேரடியாக கேள்வி எழுப்புவோம்.
இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்தப்பட வேண்டும். அதற்கு முன்பு, குஜராத் முதல்வர் ஆனந்த் பென் படேல் பதவி விலக வேண்டும்.
இவ்வாறு ஆனந்த்சர்மா கூறியுள்ளார்.