ஆப்கன் தேசிய தொலைக்காட்சி நிறுவனத்தில் தீவிரவாத தாக்குதல். 40 பேர் பணயக்கைதிகளா?
ஆப்கானிஸ்தான் நாடு கடந்த பல வருடங்களாக ஐ.எஸ் உள்பட பல தீவிரவாத இயக்கங்களின் பிடியில் உள்ள நிலையில் இன்று அந்நாட்டு தேசிய தொலைக்காட்சி நிறுவனத்தின் அருகே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் நங்கர்ஹர் மாகாண ஆளுநர் மாளிகை அருகே அரசுக்கு சொந்தமான, தேசிய தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது தீவிரவாதிகள் திடீரென சரமாரியான தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் அங்கு வந்த ஆப்கன் நாட்டு பாதுகாப்புப் படை வீரர்கள், தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தனர்.
இந்த கட்டிடத்தின் உள்ளே சுமார் 40க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களை தீவிரவாதிகள் பணயக்கைதியாக பிடித்து வைத்திருக்க கூடும் என்றும், அவர்களை பத்திரமாக மீட்க அனைத்து நடவடிக்கைகளை எடுக்கவும் ஆப்கானிஸ்தான் அரசின் உயரதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.