கவுகாத்தியில் ஐ.ஐ.டி கல்லூரியில் படித்து வந்த மாணவர் ஒருவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதால் மாணவர்களின் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கவுகாத்தி ஐ.ஐ.டி.யில் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் பட்டப்படிப்பு படித்து வந்த மாணவர் 19 வயது மாணவர் துஷார் யாதவ் என்பவர் கல்லூரி விடுதியின் அருகே நேற்று மரணமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவ்ரை பரிசோதனை செய்ததில் அவருடைய சட்டைப்பையில் ஒரு கடிதம் இருந்தது. அவருடைய பெற்றோருக்கு அவர் எழுதிய அந்த கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
அந்த கடிதத்தில் மாணவர் தான் சில நாட்களாக மிகுந்த மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தன்னுடைய வாழ்வை முடித்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும், எனவே தனது பெற்றோர்கள் தன்னை மன்னிக்குமாறும் எழுதியுள்ளார். மாணவரின் பெற்றோர் டெல்லி அருகே உள்ள குர்கான் என்ற பகுதியில் வசித்து வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட மாணவரின் பெற்றோருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் வரவழைக்கப்பட்டனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கவுகாத்தி போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.