நீட் தேர்வுக்கு ஆதரவாக ஒரு உயிர் போனபோது எதிர்க்கட்சிகள் எங்கே இருந்தன? எச்.ராஜா
இன்று நீட் தேர்வை எதிர்த்து உயிரிழந்த மாணவிக்காக குரல் கொடுக்கும் எதிர்க்கட்சிகள், நீட் தேர்வுக்கு ஆதரவாக வேலூரில் மாணவர் ஒருவரின் தாயார் தற்கொலை செய்துகொண்டபோது எதிர்க்கட்சிகள் அமைதி காத்தது ஏன் என பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது: மாணவி அனிதாவின் முடிவு வருத்தமளிக்கின்றது. வேளாண் கல்வி பயின்று விவசாயிகளுக்கு உதவப்போவதாக கூறிய மாணவி எப்படி தற்கொலை செய்துகொள்ள முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்,
அதே நேரத்தில் அநாகரீகமான மற்றும் நியாயமற்ற முறையில் பா.ஜ.க.வை, தி.மு.க. விமர்சிப்பது, வருகிற 20ஆம் தேதி வெளியாகவுள்ள 2ஜி வழக்கு தீர்ப்பு தேதிக்கு அக்கட்சி ஒத்திகை பார்ப்பதுபோல் உள்ளதாக எச்.ராஜா சாடியுள்ளார்.
நீட் தேர்வு ரத்தாகிவிடும் என்ற அச்சத்தில் வேலூரில் மாணவர் ஒருவரின் தாயார் சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டபோது எதிர்க்கட்சிகள் எங்கு சென்றன என்று கூறிய அவர், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் உதயக்குமார் கொலையில் தொடர்புடையவர்கள் தற்போது முதலைக்கண்ணீர் வடிப்பதாகவும் தெரிவித்தார்.