சென்னை ஐஐடியில் உள்ள அம்பேத்கர், பெரியார் பெயரில் ஏற்படுத்தப்பட்ட மாணவர் அமைப்பை கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐஐடி நிர்வாகம் தடை செய்ததால் பல மாணவர் அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஐ.ஐ.டி.க்கு எதிராக போராடியவர்களை தமிழக அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்திருக்க வேண்டும் என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளதால் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தாராபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது ”ஐ.ஐ.டி.யில் அம்பேத்கர், பெரியார் பெயரில் ஏற்படுத்தப்பட்ட மாணவர் அமைப்பில் 10 மாணவர்கள் கூட இல்லை. சில நிபந்தனைகளுக்கு உட்பட்டுத்தான் இந்த அமைப்புக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஐஐடி பெயரை பயன்படுத்தாமல் இந்த அமைப்பை மாணவர்கள் நடத்தி கொள்ளலாம் என்ற நிபந்தனையுடன் தான் அந்த அமைப்பு செயல்பட்டது. ஆனால், விதியை மீறி மாணவர்கள் ஐ.ஐ.டி. பெயரை பயன்படுத்தியதோடு பிரதமர் மோடியை எதிர்த்து பேசியுள்ளனர். மேலும் இந்து மதத்திற்கு எதிராக கருத்துக்களையும் பேசியுள்ளதால்தான் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஐ.ஐ.டி. என்பது சுய ஆட்சி அதிகாரம் பெற்ற ஒரு அமைப்பு. நிர்வாக ரீதியாக நிறுவனத்தின் விதிகளை மீறியதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை இது. இதற்கும் மத்திய அரசுக்கும் சம்பந்தம் இல்லை. ஐ.ஐ.டி. எதிராக போராடியவர்களை தமிழக அரசு, குண்டர் சட்டத்தில் கைது செய்திருந்தால், பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டிருக்கும்’ என்று பேசியுள்ளார்.
எச்.ராசாவின் இந்த பேச்சு மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.