அடர்த்தி, பளபளப்பு மற்றும் கருமையான கூந்தல்; இவைகளை பெற ஒவ்வொரு பெண்ணுக்கும் பெரிய கனவே இருக்கும். அதற்கு காரணம் பெண்களின் அழகை தீர்மானிக்க கூந்தலும் ஒரு மிக முக்கிய காரணியாக விளங்குகிறது. இது உண்மையாக இருந்தாலும் கூட அடர்த்தியான நீண்ட கூந்தல் அவ்வளவு எளிதில் வந்து விடுவதில்லை. அழகான கூந்தலை பெறுவதற்கு கூந்தல் பராமரிப்புகளை பற்றி பெண்கள் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டும். அழகான கூந்தலை பெறுவதற்கும், அப்படியே பெற்று விட்டாலும் கூட, அவை நீண்ட நாட்களுக்கு நீடித்து நிற்பதற்கும் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் குழம்பி போயுள்ளீர்களா? கவலை கொள்ளாதீர்கள், அதற்கு பல தீர்வுகள் உள்ளது. இயற்கையான முறையில் அழகிய கூந்தலை பெறுவதற்கு நீங்கள் சில வீட்டு சிகிச்சைகளை கையாள வேண்டி வரும்.
உங்கள் கூந்தல் வறண்டு போய் அதிகமாக கொட்டினால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா பெண்களே? ரசயானம் கலந்த விலை உயர்ந்த கூந்தல் பொருட்களின் பின்னால் ஓடினாலும் கூட சில நேரம் அவைகள் பயனளிப்பதில்லை. அதனால் இயற்கையான சிகிச்சைகளை நாடுவதே சாலச் சிறந்தது. மேலும் இப்படி இயற்கை முறையில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் பக்க விளைவுகளில் இருந்தும் தப்பிக்கலாம் அல்லவா? அதனுடன் சேர்த்து உங்களுக்கு நல்ல பலனையும் அளிக்கும். கூந்தல் பிரச்சனைக்கு தீர்வாக பல இயற்கை மூலப்பொருட்கள் உள்ளது. இவைகளை கொண்டு பெண்களுக்கான கூந்தல் பராமரிப்பை கையாளுவது என்பது இயற்கையுடன் கைகோர்த்து நடத்தப்படும் ஒரு எளிய செயல்முறையே.
புதிய முறையில் கூந்தலை வளர்த்து அதனை பராமரிக்க நீங்கள் முடிவு செய்திருந்தால் அதற்கு ஒரு சிறந்த இயற்கை மூலப்பொருள் உள்ளது; அப்படி நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு நம்பும் ஒரு பொருள் தான் தேங்காய் பால். தேங்காய் பால் உங்கள் கூந்தல் வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும். சாதரணமாக வீட்டில் கிடைக்க கூடிய பொருளாகிய அதனை கொண்டு செய்யும் சிகிச்சையை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் முயற்சி செய்து பார்க்கலாம். கூந்தல் பராமரிப்பிற்கு தேங்காய் பாலை பயன்படுத்துவதற்கான காரணங்களையும், அதன் நன்மைகளையும் பற்றி உங்களுக்காக நாங்கள் விளக்கியுள்ளோம். அவைகளை பற்றி இப்போது பார்க்கலமா?
தேங்காய் பாலில் அப்படி என்ன தான் உள்ளது?
தேங்காய் பாலில் புரதச் சத்தும் கொழுப்புகளும் வளமையாக உள்ளது. மேலும் அதில் மாங்கனீசு மற்றும் இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் பாலை உபயோகப்படுத்துவதற்கு இவைகளை விட வேற காரணம் வேண்டுமா என்ன? தேங்காய் பாலில் பல நன்மைகள் அடங்கியுள்ளது. கூந்தல் வளர்ச்சி அதில் ஒன்றாக விளங்குகிறது. தேங்காய் பாலின் நன்மைகள் மேலோங்கி நிற்பதற்கு காரணம் அதில் அடங்கியுள்ள மூலப்பொருட்களே. இது தலைமுடி உதிர்வையும் தடுக்கும். ஆரோக்கியமான கூந்தலை பராமரிக்க தலைமுடி உதிர்வை தவிர்ப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆகையால் தேங்காய் பாலை கொண்டு ஆரோக்கியமான பளபளப்பான கூந்தலை நாம் பராமரிக்க முடியும்.
தேங்காய் பாலை கொண்டு புரோட்டீன் சிகிச்சை:
சீரான இடைவேளையில் புரோட்டீன் சிகிச்சையை மேற்கொண்டால் உங்கள் கூந்தலின் வளர்ச்சியை மேம்படுத்தலாம். இந்த சிகிச்சையின் மூலம் உங்கள் மயிர்த் தண்டில் புரதச்சத்து இறங்கி தலைமுடி வளர்ச்சிக்கு துணை புரியும். முடி உடைதளுக்கும் கூட புரோட்டீன் சிகிச்சை பெரிதும் கை கொடுக்கும். மாதம் ஒரு முறையாவது இதனை மேற்கொண்டால் உங்கள் கூந்தல் ஆரோக்கியமாக இருக்க போவது உறுதி. அழகு நிலையம் சென்று இந்த சிகிச்சையை மேற்கொள்வதால் ஏற்படும் செலவை நினைத்து பயந்தால் இதனை நீங்களே உங்கள் வீட்டில் செய்து கொள்ளலாம். முயற்சி செய்து பாருங்கள்!
தேங்காய் பாலில் எண்ணிலடங்கா நன்மைகள் ஒளிந்து கொண்டிருக்கின்றன. ஆகையால் அதனை புரோட்டீன் சிகிச்சைக்கு பயன்படுத்துவதில் பெரிய அதிசயம் ஒன்றுமில்லை. தேங்காய் பாலினால் ஏற்படும் நன்மைகளை உண்மையாகவே அனுபவிக்க வேண்டுமானால் அதனை பயன்படுத்த தொடங்குங்கள். அப்படி தொடங்கி விட்டீர்களானால் உங்கள் கூந்தல் அழகாக மாறுவதை நீங்கள் கண்கூடாக பார்க்கலாம். இந்த சிகிச்சையை எப்படி மேற்கொள்வது என்று உங்களுக்காக விளக்கியுள்ளோம். அதனை படித்து தேங்காய் பாலின் மகத்துவத்தை அறிந்து அதன் பயன்களை பெற்றுக் கொள்ளுங்கள்.
புரோட்டீன் சிகிச்சைக்கான மூலப்பொருட்கள்: –
தேங்காய் பால் – முட்டை – எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் எண்ணெய் – ஆர்கான் எண்ணெய் – தேங்காய் எண்ணெய்
என்ன செய்ய வேண்டும்?
மேற்கூறிய மூலப்பொருட்கள் அனைத்தையும் சரிசமமாக கலக்கிக் கொள்ளுங்கள். அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது, உங்கள் கூந்தலை சரி சமமாக இரண்டு பாகமாக பிரித்துக் கொண்டு, இந்த கலவையை வட்டவடிவில் தடவ வேண்டும். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இரத்த ஓட்டத்தில் முன்னேற்றம் இருந்தால் கூந்தல் வளர்ச்சி ஏற்படும்.