அரையாண்டு தேர்வு ஜனவரிக்கு மாற்றம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு!

அரையாண்டு தேர்வு ஜனவரிக்கு மாற்றம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு!

hayaடிசம்பர் 7ஆம் தேதி தொடங்க இருந்த பள்ளிகளுக்கான அரையாண்டு தேர்வுகளை ஜனவரி மாதத்திற்கு மாற்றி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ”வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று (30.11.2015) இரவு முதல் தமிழகத்தின் பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் இன்றும் (1.12.2015) கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று தமிழகத்தில் பரங்கிப்பேட்டையில் 15 செ.மீ., மரக்காணத்தில் 14 செ.மீ., செய்யூரில் 13 செ.மீ., மதுராயதகத்தில் 12 செ.மீ., என சில இடங்களில் மிக அதிக அளவு மழை பெய்துள்ளது. இதன் காரணமாக மழை / வெள்ள பாதிப்புகளுக்கு உள்ளாகக் கூடிய மாவட்டங்களில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்த மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் 29.11.2015 அன்றே மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்திய வானிலை ஆராய்ச்சி நிலைய அறிக்கையில் இன்றும் (1.12.2015) நாளையும் (2.12.2015) தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் கன மழை மற்றும் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடர் மழை காரணமாக எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகள் ஆகியவற்றை இன்று (1.12.2015) நான் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பெருமக்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு செய்தேன்.

நான் ஏற்கெனவே உத்தரவிட்டதன் அடிப்படையில், தற்போது பெய்து வரும் கனமழையில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஏரிகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதாலும், தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ வாய்ப்புள்ளதன் காரணமாகவும், மழை நீர் சூழும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், மழை நீர் சூழ வாய்ப்புள்ள பகுதிகளில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், கடலோர பாதுகாப்புப் படை ஆகியோர் தேவைக்கேற்ப பாதிக்கப்படும் மக்களை படகுகள் மூலம் மீட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க தயார் நிலையில் உள்ளனர். பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படும் மக்களுக்கு உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட இதர வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. மேலும், பொது மக்களுக்குத் தேவையான மருத்துவ முகாம்களை தொடர்ந்து நடத்தவும், நிலவேம்பு குடிநீர் வழங்கவும் நான் ஆணையிட்டுள்ளேன்.

நேற்று (30.11.2015) இரவு முதல் அதிகமாக மழை பெய்து வரும் சென்னை, திருவள்ளூர், கடலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை அமைச்சர்கள் மேற்பார்வையிட நான் ஆணையிட்டுள்ளேன். இதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் நிதி மற்றும் பொதுப் பணித்துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், நெடுஞ்சாலைத் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சித் துறை அமைச்சர் பி.வி.ரமணா மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன் துறை அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம் ஆகியோர் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்பார்வையிட்டு அதிகாரிகளுக்கு தக்க அறிவுரை வழங்குவார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், குறிப்பாக தாம்பரம் முடிச்சூர் பகுதிகளில், உயர்கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தொழில் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் பி. தங்கமணி மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா ஆகியோர் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்பார்வையிட்டு அதிகாரிகளுக்கு தக்க அறிவுரை வழங்குவார்கள்.

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மின்சாரம் மற்றம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் ஆர். விசுவநாதன், வீட்டுவசதி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம், சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் பா.வளர்மதி மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் எஸ்.கோகுல இயதிரா ஆகியோர் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்பார்வையிட்டு அதிகாரிகளுக்கு தக்க அறிவுரை வழங்குவார்கள்.

கடலூர் மாவட்டத்தில் வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்பார்வையிட்டு அதிகாரிகளுக்கு தக்க அறிவுரை வழங்குவார்கள்.

பெருமழையின் காரணமாக மின்கம்பிகள் அறுந்து விழுவதை தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு மின்வாரியம் மின் கம்பங்கள் மற்றும் மின் வழித்தடங்களை முழுமையாக ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்யுமாறு நான் உத்தரவிட்டுள்ளேன்.

English Summary: Half yearly exams are postponed said CM

Leave a Reply