நாமக்கல்லில் உலக அதிசய பாலம்: நீதிபதி கிண்டல்

நாமக்கல்லில் உலக அதிசய பாலம்: நீதிபதி கிண்டல்

நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களை இணைக்கும் சாலையில் உள்ள பாலம் புதிய உலக அதிசயம் என்று சென்னை உயர்நீதிமன்றம் நக்கலாக கண்டித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தையும் ஈரோடு மாவட்டத்தையும் இணைக்கும் சாலையில் சோலசிராமணி என்னும் பகுதியில் உள்ள காவிரி ஆற்றுப்பாலம் மிக மோசமான நிலையில் உள்ளது. பாலத்தின் சில தூண்கள் பழுதடைந்து தொங்கும் பாலம் போல காட்சியளிக்கிறது.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. இது தொடர்பாக திங்கட்கிழமை உத்தரவு பிறப்பித்த நீதிபதி கிருபாகரன், பழங்கால நினைவுச்சின்னம் போல, பாபிலோன் தொங்கும் தோட்டம் போல இருக்கும் இப்பாலம் புதிய உலக அதிசயம் போலவே உள்ளது என்று கூறினார்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டிய தஞ்சை பெரிய கோயில் நிலைத்து நிற்கிறது. 1500 ஆண்டுகளுக்கு முன்னால் கரிகாலன் கட்டிய கல்லணை உறுதியுடன்தான் இருக்கிறது. ஆனால், 4 ஆண்டுகளுக்கு முன் கட்டிய இப்போலம் இப்போதே ஆட்டம் கண்டுவிட்டது என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

மேலும், இப்பாலம் தொடர்பாக 20 கேள்விகளை அடுக்கி அவற்றிற்கு இன்னும் 6 வாரங்களில் விளக்கமான பதில் அளிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply