முன்னாள் பீகார் மாநில முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான லாலு பிரசாத யாதவ் அவர்களுக்கு மொத்தம் ஏழு மகள்கள். இவர்களில் ஒருவரான மிசா பாரதி சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு சென்றிருந்தார். அங்குள்ள ஒரு மேடையில் அவர் உரையாற்றுவது போன்ற ஒரு புகைப்படம் அவருடைய ஃபேஸ்புக்கில் சமீபத்தில் வெளியானது. அந்த படத்தின் கீழ், மிசா பாரதி இளைஞர்களின் வளர்ச்சி குறித்து அவர் ஹார்வர்டு பல்கலையில் சொற்பொழிவு நிகழ்த்தியதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஆனால் இந்த புகைப்படம் குறித்து சந்தேகம் அடைந்த ஒருவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது விளக்கம் அளித்துள்ள பல்கலைக்கழக நிர்வாகம், ” ‘‘மிசா பாரதி பார்வையாளர்களில் ஒருவராகத்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்து இருந்தார். ஹார்வர்டில் நடந்த இந்திய மாநாட்டுக்கு அவர் பேச்சாளராகவோ அல்லது குழுவின் சார்பாகவோ அழைக்கப்படவில்லை. மேலும், பார்வையாளர் என்கிற முறையில்தான் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள டிக்கெட்டு வாங்கி இருந்தார் என்பதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது’’ என்று கூறி இருந்தது.
ஆனால் அவர் எப்படி மேடையில் நின்று பேசுவதுபோல் புகைப்படம் எடுத்துக் கொண்டார் என்று தெரியவில்லை என்றும் ஹார்வர்டு பல்கலைக்கழகம் கூறியுள்ளதால் ஃபேஸ்புக்கில் வெளியான புகைப்படம் போலியானது என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மிசா பாரதிக்கு எதிராக பீகார் மாநில பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் பிரகாஷ் பிரசார் என்பவர் முசாபர்பூர் நகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்து உள்ளார். அதில் வேண்டுமென்றே ஏமாற்றுதல், மோசடி, போலி ஆவணங்களை உண்மையானது போல் காட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் மிசா பாரதி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் கூறி உள்ளார்.
இந்த மனு மீது வருகிற ஜூன் மாதம் 5-ந்தேதி விசாரணை செய்யப்படும் என்று மாஜிஸ்திரேட்டு வேத பிரகாஷ் சிங் கூறியுள்ளார். இதனால் பீகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
40 வயது மிசா பாரதி கடந்த பாராளுமன்ற தேர்தலில் ராஷ்டீரிய ஜனதாதளம் சார்பில் பீகார் மாநிலம் பாடலிபுத்திரா தொகுதியில் போட்டியிட்டு பா.ஜனதாவின் ராம்கிருபால் யாதவிடம் தோல்வி கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.