அதிமுக தலைவர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தையா? தீபா பதில்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டபோதிலும், அவர் ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் இணைவாரா? அல்லது புதுக்கட்சியை ஆரம்பிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தனது முடிவை வரும் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் அதிமுகவில் சசிகலாவிடம் அதிருப்தி கொண்ட தலைவர்களுடன் தீபா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, “நான் நானாகவே இருக்கிறேன். நான் அ.தி.மு.க. தலைவர்களுடன் ரகசிய பேச்சு நடத்தியதாக வெளியாகி இருக்கும் தகவல் தவறு. அடிப்படை ஆதாரமற்றது.
எனது வீட்டின் முன்பு தினமும் மணிக்கணக்கில் திரண்டு நிற்கும் தொண்டர்களை பார்க்கிறேன். என்னை நம்பி வரும் அவர்களுக்கெல்லாம் நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன். அதே நேரத்தில் அவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை வந்து விடுமோ என்ற அச்சமும் உள்ளது. தற்போது அவர்களின் கருத்துக்களை கேட்டு வருகிறேன் என்று கூறியுள்ளார்.
தீபா தனிக்கட்சி ஆரம்பிப்பது உறுதி என்றும் முதல்வராக சசிகலா பதவியேற்றால் அதிருப்தியில் உள்ள அதிமுக தலைவர்கள் வெளிப்படையாக தீபாவை ஆதரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் பிப்ரவரி 24வரை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்