சுட்டெரிக்கும் வெயில் காலத்தினை சமாளிக்க டிப்ஸ்

dbdb6aa5-65e8-4440-9dd6-ee28ee33f1ef_S_secvpf

கோடை வெயில் வழக்கமாக ஏப்ரல் முதல் வாரத்தில் அதாவது இந்த வாரத்தில்தான் தொடங்கும். மே மாதம் வெயில் அளவு உச்சக்கட்டத்தில் இருக்கும். ஆனால் தமிழ்நாட்டில் கடந்த மாதமே வெயில் தன் உக்கிரத்தைக் காட்டத் தொடங்கி விட்டது. தற்போது கத்திரி வெயில் காலம் போல வெயில் வாட்டி வதைக்கிறது.

வெயில் உக்கிரமாகி வருவதால் வெளியில் தலை காட்ட முடியவில்லை. ‘சுள்’ளென்று அடிக்கும் வெயில் மண்டையை பிளந்து விடும் போல உள்ளது. அனல் காற்று உடம்பு முழுவதும் பரவி ‘தகதக’வென எரிய வைக்கிறது. இதனால் சாதாரணமாக வெளியில் சென்று வந்தாலே உடலும், உள்ளமும் சோர்வடைந்து விடுகிறது.

நாக்கை வறண்டு போக செய்யும் கோடை வெயில் காலத்தில் நாம் ஒவ்வொருவரும் மிகவும் உஷாராக இருக்க வேண்டும். குறிப்பாக வெயிலில் செல்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்ற நிலையில் இருப்பவர்கள் முன் எச்சரிக்கையுடன் இருந்தால் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். கோடை வெயிலில் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டுமானால் எப்போதும் உங்களை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.

காலையில் எழுந்தவுடன் இரண்டு முதல் நான்கு கிளாஸ் வரை நீர் பருகுங்கள். ஒரு மணிக்கொரு முறை சிறிது நீர் பருகுங்கள். சோற்றுக் கற்றாழை பசுமையாய் கிடைத்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான். அதனை உடலில் தடவி தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து குளியுங்கள். உடம்பு ஏசி போட்டதுபோல இருக்கும். இல்லையெனில் சோற்று கற்றாழை ஜெல் என கிடைக்கும்.

அதனை உடலில் நன்கு தடவிக் கொள்ளுங்கள். வெயில் என்று உடற்பயிற்சியை நிறுத்தி விடாதீர்கள். உடற்பயிற்சிக்கு என்றுமே விடுமுறை கிடையாது. வெயிலை சமாளிக்க உடற்பயிற்சி அவசியம். ஆனால் கொளுத்தும் வெயிலில் சென்று உடற்பயிற்சி செய்ய வேண்டாம். தர்பூசணி, வெள்ளரி, ஆரஞ்சு என பழங்களை சாப்பிடுங்கள்.

வெள்ளரி, கோஸ், பூசணி, வாழைத்தண்டு, கேரட், புதினா, கொத்தமல்லி, எலுமிச்சை இவைகளை ஜூஸ் செய்து சாப்பிடுங்கள். இவை உங்களை கோடைக்காலத்தில் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இலகுவான புரதத்தினை சேர்த்துக் கொள்ளுங்கள். சோயா, பருப்பு வகைகள் போன்றவை எளிதான சத்தான புரதங்கள்.

பாதாம், பிஸ்தா போன்றவைகளையும் அளவோடு எடுத்துக் கொள்ளுங்கள். தக்காளியும், மாதுளையும், நெல்லியும் கோடைக்காலத்திற்கு கண்கண்ட அமிர்தம் என்பதால் இதனை தினமும் அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள். மிளகு, இஞ்சி சேர்த்துக் கொள்ளுங்கள். எண்ணெய், காரம் குறிப்பாக ஊறுகாய், வத்தல் இவை கோடை காலத்தில் தவிர்க்கப்பட வேண்டியவை.

நிறைய நீர், மோர் குடியுங்கள். ஐஸ் கட்டி, மிகவும் குளிர்ந்த ஐஸ்கிரீம் இவை அவசியம் தவிர்க்கப்பட வேண்டியவை. சிறு சிறு அளவாக உண்ணுங்கள். அதிக நீர் சத்து உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். கோடை காலத்தில் பிள்ளைகளை அழைத்து கொண்டு வெளியில் செல்வதும் உணவு அருந்துவதும் குடும்ப மகிழ்ச்சிதான்.

ஆனால் இந்த கோடையில்தான் கிருமிகள் வேகமாக பரவும். எனவே வீட்டில் தயாரித்த உணவுகளையே சாப்பிடுவது நல்லது. கோடையில் காய்கறிகள், பழங்கள் விரைவில் கெட்டு விடும். எனவே அவை கெட்டு விடாது இருக்க உங்கள் குளிர்சாதன பெட்டியினை சரியான டிகிரியில் செட் செய்யுங்கள்.

* வெளியில் வாங்கும் உணவுகளை சீக்கிரம் வீட்டிற்கு கொண்டு வாருங்கள்.

* குளிர் சாதன பெட்டியில் அடைத்து வைக்காதீர்கள். பெட்டியும் கெடும். உணவுப் பொருளும் கெடும்.

* கெட்ட உணவுகளையோ, பொருட்களையோ உடனடி கவரில் போட்டு வாயை கட்டி எறிந்து விடுங்கள். உணவே விஷமாவது கோடையில் கிருமிகளின் காரணமாக அதிகரிக்கின்றது என்பதால் வாந்தி, வயிற்றுப் போக்கு அதிகமாகக் காணப்படும். 

* வாந்தி

* வயிற்று வலி

* வயிற்றுப்போக்கு

* ஜீரம்

* தலைவலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடி மருத்துவ சிகிச்சை பெறுங்கள். இல்லையெனில் கிருமிகள் உடலில் வேகமாக பரவும்.

* வெயிலால் அதிகம் தாக்குதல் இருந்தால் உடனடி ஷவர் எனப்படும் வகையில் தலையில் இருந்து உடல் முழுவதும் நீர் படும்படி சிறிது நேரம் இருங்கள்.

* வறண்ட வாய், கண், வறண்ட சருமம், படபடப்பு இவை நீர் வற்றுவதன் அறிகுறியாகும். அத்தகைய நேரங்களில் எலக்ட்ரால் கலந்த தண்ணீர் குடியுங்கள். இல்லையெனில் நிறைய தண்ணீர் குடியுங்கள்.

* சருமத்திற்கு சன்ஸ்கீன் லோஷன் தடவுங்கள். சரும பாதுகாப்புக்கு டால்கம் பவுடர் பயன்படுத்துங்கள்.

* அடர்ந்த நிறமுடைய குடை, மெல்லிய பருத்தி ஆடை, கண்களை வெளிச்சம் தாக்காத படியான நீண்ட தொப்பி, கறுப்பு கண்ணாடி, உங்களை கோடையிலிருந்து நன்கு காப்பாற்றும். கோடையில் உற்பத்தியாகும் அதிக கிருமிகள் வாய் வழியே உள்ளே செல்லும் வாய்ப்பு அதிகம். எனவே தினமும் அடிக்கடி நன்கு வாய் கொப்பளியுங்கள்.

* நெல்லி, எலுமிச்சை, மாதுளை, தர்பூசணி, தக்காளி, வெள்ளரி, பூசணி இவை அவசியம்.

* செம்பருத்தி டீ, க்ரீன் டீ இவைகளும் கோடைக்கு பேருதவி செய்யும்.

* சைவ உணவு உட்கொள்பவர்கள் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையோடு பிகாம்ப்ளெக்ஸ் சத்து மாத்திரை எடுத்துக் கொள்ளலாம்.

* கொளுத்தும் வெய்யிலில் வெளியில் சென்று வந்ததும் தவிப்பாய் இருக்கின்றதா? உடனடி ஒரு க்ரீன் டீயோ அல்லது 2 ஸ்பூன் வெங்காய ஜூஸோ எடுத்துக் கொள்ளுங்கள். சூரிய கதிரால் ஏற்பட்ட திசுக்கள் பாதிப்பினை இது உடனடியாக சரி செய்து விடும்.

* வெங்காயம் குறிப்பாக சிறிய வெங்காயம் சூட்டினை குறைப்பதில் வல்லது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் நீர் ஊற்றிய முதல் இரவு சாதமும், வெங்காயமும் உடலுக்கு சிறந்த உணவாக நிரூபணமாகி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது நம் முன்னோர் கண்டு பிடித்த பெருமைக்குரிய உணவு வகையாகும். இன்னும் 3 மாதங்களுக்கு வெயில் போகும் வரை இந்த நீராகார உணவை சாப்பிடுவது மிகவும் நல்லது.

* சாலட் எனப்படும் பச்சை காய்கறி கலவையை சின்ன வெங்காயம் சேர்த்து தினமும் இரு முறை எடுத்துக் கொள்ளுங்கள். துருவிய முட்டை கோஸ், துருவிய கேரட், பொடியாய் நறுக்கிய சின்ன வெங்காயம், பாதாம், பிஸ்தா துறுவல் சிறிது, கொத்தமல்லி தழை பொடியாய் நறுக்கியது, எலுமிச்சை சாறு, இஞ்சி சாறு, தக்காளி பொடியாய் நறுக்கியது, கொடை மிளகாய் பொடியாய் நறுக்கியது. மாதுளை – 2 டேபிள் ஸ்பூன் இவையெல்லாம் சாலட் கலவைக்கு உகந்தவை. இந்த கலவை கோடையில் உங்கள் உடலை சீராக வைத்திருக்க உதவும்.

* வெளியில் செல்லும் முன் ஒரு கிளாஸ் நீர் அருந்தி செல்லுங்கள். இதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

* சிறு குழந்தைகள் வெயிலின் தாக்குதலுக்கு அதிகம் ஆளாவார்கள் என்பதால் அவர்களுக்கு அதிக பாதுகாப்பு தேவை. வெயில் என ஒதுங்காது பாதுகாப்பாக, முன் எச்சரிக்கையுடன் சுற்றுலா சென்று வாருங்கள். மேற்கூறிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றினால் நம்மை அச்சுறுத்தும் கோடையை மிக எளிதாக கடந்து விடலாம். உடலில் நீர் குறைதலின்

அறிகுறிகள் :

* வறண்ட வாய்
* தாகம்
* குறைந்த சிறுநீர்  வெளியேற்றம்
* எரிச்சல்
* தலைவலி
* தலை சுற்றல்
* தசைகளில் பிடிப்பு
* நினைவின்மை

Leave a Reply