ஜப்பானில் வரலாறு காணாத மழை. 90,000 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்
ஜப்பான் நாட்டில் வரலாறு காணாத அளவில் கடும் புயல்மழை பெய்து வருவதால் அந்நாட்டின் முக்கிய நகரங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு வருவதாகவும், பொதுமக்களின் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்துள்ளதால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஜப்பான் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், ஜப்பானில் வீசி வரும் டைபூன் இடாவ் என்ற புயல் காரணமாகப் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு மாறியுள்ளனர்.
ஜப்பானில் உருவான இடாவ் புயலால் மத்திய டொச்சிகி பகுதியில் கடந்த திங்கட்கிழமை மாலை முதல் சுமார் 60 சென்டிமீட்டர் அளவு கடுமையான மழை பெய்தது. இந்த புயல் கடந்த புதன்கிழமை மிகவும் தீவிரமடைந்ததால் ஜப்பான் கடும் வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ளது. மேலும் புதன்கிழமை மாலை ஜப்பானின் கிழக்கு கடலில் புயல் கரையை கடந்ததைத் தொடர்ந்தும் மழை பொழிந்து வருவதால், டொச்சிகி அதிகாரிகள் 90,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களை வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்தில் தங்கும்படி உத்தரவிட்டுள்ளனர்.
இதுவரை புயலால் ஒருவர் பலியானதாகவும்,22 பேர் காணாமல் போயுள்ளதாகவும் மக்கள் மேலும் பலர் கடுமையான காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொட்டிவரும் கனமழை காரணமாக புகுஷிமா அணு உலையில், உலைக்கூடங்களை குளிர்விக்க பயன்படுத்தப்படும் பெரும் அளவிலான நீர் சேமிக்கும் தளம் மூழ்கி விட்டதால், அதில் இருந்த கதிர்வீச்சு பாதிக்கப்பட்ட நீர் கடலில் கலந்துள்ளதாக டோக்கியோவின் டெப்கோ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
இந்தப் பாதிப்பு சுனாமி நிகழ்ந்ததைப் போல இருப்பதாகவும், மக்கள் மத்தியில் கதிவீச்சு அச்சம் பரவியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.இந்நிலையில், இதுபோன்ற பேரழிவின்போது அரசாங்கம் ஒன்றுபட்டு மக்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பதில் முன்னுரிமை செலுத்த வேண்டும் எனவும், தற்போது அரசாங்கம் பாதுகாப்பு குறித்து அதிக எச்சரிக்கையுடன் இருப்பதாகவும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.