மணிப்பூரில் வரலாறு காணாத மழை. 60% மக்கள் பாதிப்பு
[carousel ids=”69528,69529,69530,69531,69532,69533,69534″]
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் மாநிலத்தில் வரலாறு காணாத மழை பெய்ததால், அந்த மாநிலமே வெள்ளத்தில் மிதந்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கடந்த 200 ஆண்டுகளுக்கு பிறகு மணிப்பூர் மாநிலத்தில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்து கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளதால், அம்மாநிலத்துக்கு ரூ.8.5 கோடி நிதியுதவியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
கடந்த ஒரு வாரமாக மணிப்பூர் மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழை காரணமாக மணிப்பூர் மாநிலமே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான வீடுகள் மழை நீரில் மூழ்கும் நிலைக்கு வந்துள்ளது. பயிர்கள் அனைத்தும் வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ளது. பல இடங்களில் சாலைகள் மற்றும் மின்சார இணைப்புகள் தூண்டிக்கப்பட்டு உள்ளதால் அங்குள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்துள்ளது. மேலும் ஒருசில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளன. 60 சதவீதம் மக்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மணிப்பூர் மாநில அரசு தெரிவித்துள்ளது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அம்மாநிலத்திற்கு மத்திய அரசு முதல் கட்டமாக 8.5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. மேலும் மணிப்பூர் மக்களுக்கு தேவையான உதவிகள் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் வெள்ள நிவாரண பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக மாநில அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறியுள்ளனர்.