சென்னையில் கொட்டித் தீர்த்த மழை

நாகை அருகே கரையை கடந்து நிலப்பகுதியில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, சென்னையில் நேற்று அதிகாலை முதலே அனேக இடங்களில் மழை பெய்தது. காலை 8.30 மணிக்கு பிறகு சுமார் ஒரு மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது.

இதனால் சென்னையின் பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

சென்னை அண்ணா சாலையில் இருந்து ராயப்பேட்டை செல்லும் ஜெனரல் பீட்டர்ஸ் சாலையில் முழங்கால் அளவுக்கு மழை நீர் தேங்கி நின்றது. இதனால் அந்த சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள். ஒரு கட்டத்தில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

அண்ணா சாலையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதைக்குள் மழைநீர் தேங்கியதாகவும், அதனை மெட்ரோ ரெயில் ஊழியர்கள் மோட்டார் மூலம் வெளியேற்றியதால் தான் அந்த பகுதியில் அதிகளவு வெள்ளம் தேங்கியதாகவும் மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மாற்று வழியாக அண்ணா சாலையில் இருந்து பூத பெருமாள் கோவில் சாலை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாநகராட்சி ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு மோட்டார் பம்புகள் மூலம் தேங்கி நின்ற மழை நீர் வெளியேற்றப்பட்டது. சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு தண்ணீர் ஓரளவு வெளியேற்றப்பட்டது.

இதேபோன்று திருவல்லிக்கேணி பகுதிகளிலும் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இதனால் அசுதின்கான் தெருவில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. மேலும் திருவல்லிக்கேணி ஆதாம் மார்க்கெட் பகுதிகளிலும் மழைநீர் குளம் போல் தேங்கியது.

சைதாப்பேட்டை 4-வது மெயின் ரோடு, தேனாம்பேட்டை கே.பி.தாசன் சாலை, புரசைவாக்கம் டானா தெரு, அம்பத்தூர் எம்.டி.எச். சாலை உள்பட சில பகுதிகளில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. அவை உடனடியாக அகற்றப்பட்டன.

வடசென்னை பகுதிகளான பெரம்பூர், வியாசர்பாடி, கொடுங்கையூர், கொரட்டூர் போன்ற பகுதிகளிலும் சாலைகளில் மழை நீர் ஆறுபோல் ஓடியது.

சென்னை புறநகர் பகுதிகளான ஆலந்தூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூர், பழவந்தாங்கல், மீனம்பாக்கம், பரங்கிமலை, பெருங்குடி, மேடவாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம், பள்ளிக்கரணை போன்ற பகுதிகளில் 2 நாளாக நேற்றும் பலத்த மழை பெய்தது.

இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல தேங்கி நின்றது. பரங்கிமலை, பழவந்தாங்கல், தில்லைகங்காநகர், மீனம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள சுரங்கப்பாதைகளில் மழைநீர் குளம் போல தேங்கியிருந்தது. உடனடியாக ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் அங்கு போக்குவரத்து சீரானது.

ஆதம்பாக்கம் மஸ்தான் கோரி தெருவில் சாலை போடுவதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சீரமைக்கப்படாததால் மழைநீர் தேங்கியது. ஆலந்தூர் கண்ணன் காலனி 2, 3-வது தெருக்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியிருந்தது. மாநகராட்சி கவுன்சிலர் ப.முத்து தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் தேங்கிய மழைநீரை அகற்றினார்கள்.

பெருங்குடி, மடிப்பாக்கம், உள்ளகரம், மேடவாக்கம், பள்ளிக்கரணை உள்பட பல பகுதிகளிலும் மழைநீர் தேங்கியிருந்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்

Leave a Reply