குன்னூரில் பலத்த மழை

குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. நேற்றுமுன்தினம் மாலையில் இருந்து நேற்று காலை வரை விடிய, விடிய குன்னூர், பர்லியார், கொலக்கம்பை உள்ளிட்ட இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின.

இதனிடையே பில்லூர் மட்டம் பகுதியில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் தரையில் புகை மற்றும் நெருப்பு வந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் அச்சமடைந்து போலீஸ், வருவாய்துறை, மின்சார துறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது, அவ்வழியாக செல்லும் உயர் அழுத்த மின் கம்பி, மழையால் துண்டிக்கப்பட்டு தரையில் விழுந்துள்ளதும், இதன்காரணமாக தீ மற்றும் புகை வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மின்துறையினர் மின் இணைப்பை துண்டித்தனர்.

குன்னூர்,ஊட்டி இடையே அருவங்காடு அருகே ரயில்பாதையில் ராட்சத மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. தகவலறிந்து வந்த ரயில்வே ஊழியர்கள் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அரை மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் மேட்டுப்பாளையம், குன்னூர் இடையே தண்டவாளத்தில் சரிந்து கிடந்த மண் குவியல் மற்றும் கற்களை ஊழியர்கள் அகற்றினர்.

Leave a Reply