உலக அளவில் உயர் ரத்த அழுத்த நோய் பாதிப்புக்கு சுமார் 100 கோடி பேர் உள்ளாகியுள்ளனர். இந்த நோய் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு மூளை, இதயம், சிறுநீரகம், கண்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
ரத்த அழுத்த பரிசோதனை அவசியம்: உயர் ரத்த அழுத்த நோய் பாதிப்பு வெளிப்பட்டு சிகிச்சைக்குச் சென்ற பிறகே நோய் பாதிப்பின் தீவிரத்தை அறிய முடியும். ஆகவே வேறு நோய் பாதிப்புக்கு சிகிச்சைக்குச் செல்லும் போது மருத்துவரிடம் ரத்த அழுத்த பாதிப்பிற்கான சோதனையையும் மேற்கொள்வது அவசியம்.
உப்பைக் குறையுங்கள்: தலைவலி, மூச்சிரைத்தல், தலைச் சுற்றல் ஆகிய பிரச்னைகள் இருந்தால் மருத்துவரிடம் சென்று உடனடியாக பரிசோதனை மேற்கொள்ளவேண்டும்.
புகை பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை சார்ந்த பொருள்களை உண்பது போன்ற பழக்கவழக்கத்தைத் தவிர்த்தாலே உயர் ரத்த அழுத்த பாதிப்பைத் தவிர்க்கலாம். உணவில் உப்பை குறைவாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோயாளிகளே…சர்க்கரை நோயாளிகளுக்கு சிறுநீரகப் பாதிப்புடன் உயர் ரத்த அழுத்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே சர்க்கரை நோயாளிகள் ரத்த அழுத்தத்தை 110/70 என்ற அளவில் பராமரிப்பது அவசியம்.
பாதத்தில் எரிச்சல் இருந்தால் அது சர்க்கரை நோய்க்கு உரிய அறிகுறியாகும். பாதத்தில் மதமதப்பு எனில், அது வேறு விதமான உடல் பாதிப்புக்குரிய அடையாளமாகும்.
பெற்றோருக்கு சர்க்கரை நோய் பாதிப்பிருக்கும் நிலையில், குழந்தைகளுக்கு 90 சதவீதம் சர்க்கரை நோய் பாதிப்பு இருக்க வாய்ப்புண்டு. இதுபோன்ற நிலையில் பெற்றோருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பவர்கள், தங்களது 30 வயதிலிருந்தே ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்து அதற்கேற்ப சிகிச்சையைத் தொடர்வது நல்லது.
இன்சுலின் ஊசி மருந்து எப்போது அவசியம்? நம் நாட்டில் 100 பேரில் 18 பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருக்கும் என்ற நிலை உள்ளது. சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டாலே, அது மாரடைப்பு ஏற்படுவதற்குச் சமமாகும். ஹெச்பிஏஒன்சி என்று அழைக்கப்படும் சர்க்கரை நோய்க்கான ரத்தப் பரிசோதனையில், மூன்று மாத சராசரி ரத்த சர்க்கரை அளவு 6.5 என்ற நிலையில் இருந்தால் மருந்துகள் தேவையில்லை. உடற்பயிற்சி மூலம் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.
ஆனால், ஹெச்பிஏஒன்சி சர்க்கரை அளவு 8 முதல் 10 புள்ளிகள் வரை இருந்தால் இன்சுலின் ஊசி மருந்து போட்டுக் கொள்வது அவசியம்.
அதிக தூக்கம் ஏற்பட்டால்…உயர் ரத்த அழுத்தப் பாதிப்புடன் அதிக தூக்கம் இருப்பின் தைராய்டு பரிசோதனை மேற்கொள்வது அவசியம். தினமும் சுமார் 2.5 லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும். நார்ச்சத்து உள்ள காய்கறிகளை அதிகம் சாப்பிடலாம்.
சர்க்கரை நோயாளிகளில் 60 சதவீதம் பேருக்கு இதய நோய்கள் நிச்சயம் இருக்கும். அதிலும் உயர் ரத்த அழுத்த நோய் பாதிப்பு இருக்கும். ஆகவே ரத்த கொழுப்புச் சத்து அளவுகள் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வது அவசியம்.
சர்க்கரை நோய் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு ஆகியவற்றால் உடலின் எந்த பாகத்திலும் அடைப்பு ஏற்படலாம். இது போன்ற ரத்த நாள அடைப்புகளால் மாரடைப்பு மட்டுமின்றி உடல் உறுப்புகள் பாதிக்கப்படலாம்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது நமது மூதாதையர் வாக்கு. ஆகவே நோய் இன்றி வாழ நாம் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்கவேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.