விஜயகாந்தை கைது செய்வது குறித்து ஐகோர்ட் பிறப்பித்த முக்கிய உத்தரவு.
தேமுதிக தலைவர் விஜயகாந்தை கைது செய்ய விதிக்கப்பட்ட இடைக் காலத் தடையை பிப்ரவரி 4-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் டிசம்பர் 28-ஆம் தேதி தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடத்திய போது அங்கிருந்த முதல்வர் ஜெயலலிதா படத்தை தேமுதிகவினர் அப்புறப்படுத்தினர். இதையடுத்து, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் விஜயகாந்த் உள்பட தேமுதிகவினர் மீது தஞ்சாவூர் சட்டப்பேரவை உறுப்பினர் ரங்கசாமி புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் தன்னை கைது செய்யக் கூடாது என சென்னை ஐகோர்ட் மதுரைக் கிளையில் விஜயகாந்த் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு பதில் அளிக்க அரசு தரப்பில் பதில் அளிக்க அவகாசம் கோரப்பட்டதையடுத்து விஜயகாந்தை கைது செய்ய ஜனவரி 25-ஆம் தேதி வரை நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த மனு, நீதிபதி வி.எம்.வேலுமணி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பு விளக்கத்தை அரசு வழக்குரைஞர் ஏ.பி.பாலசுப்பிரமணியன் தாக்கல் செய்தார். மேலும், இந்த வழக்கில் அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் ஆஜராகி வாதாட கூடுதல் அவகாசம் கோரப்பட்டதை பதிவு செய்த நீதிபதி, தேமுதிக தலைவர் விஜயகாந்தை கைது செய்ய விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை பிப்ரவரி 4-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.