போதிய கால அவகாசமின்றி உள்ளாட்சி இடைத்தேர்தல் அறிவித்ததாக தேர்தல் ஆணையத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் கார்த்திக் என்பவர் உள்ளாட்சி இடைத்தேர்தல் அறிவிப்புக்கு எதிராக வழக்கு ஒன்றை கடந்த வாரம் தொடர்ந்திருந்தார். அவருடைய மனுவில் அரசியல் கட்சிகள் வேட்பு மனுத்தாக்கல் செய்ய உரிய கால அவகாசம் கொடுக்கப்படவில்லை என்றும், எனவே தேர்தலை உடனடியாக நிறுத்தவேண்டும் என்றும் மனுதாக்கல் செய்தார்.
கார்த்திக்கின் மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பாக பதில் அளிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார். அவருடைய உத்தரவின்பேரில் மாநில தேர்தல் ஆணையம், உயர் நீதிமன்றத்தில் நேற்று பதில் மனு தாக்கல் செய்தது.
அந்த பதில் மனுவில் இடைத்தேர்தல் அறிவிப்பில் விதி முறைகள் பின்பற்றப்பட்டுள்ளன என்றும், சட்ட விதிகளின்படி போதிய கால அவகாசம் வழங்கியுள்ளோம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மாநில தேர்தல் ஆணையத்தின் இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம், உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது