கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய அமலாக்கத் துறை தயாநிதி மாறன், கலாநிதி மாறனுக்கு சொந்தமான ரூ.742 கோடி சொத்துகளை முடக்கி வைக்க உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரிய மனு மீது நேற்று தீர்ப்பு அளித்த சென்னை உயர்நீதிமன்றம் சொத்துக்களை முடக்கி வைக்க அமலாக்கத்துறை பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என மறுத்துவிட்டது.
ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக மாறன் சகோதரர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்த நிலையில், கோடிக்கணக்கில் பண பரிமாற்றம் நடந்திருப்பதால், இதுதொடர்பாக அமலாக்கத் துறையும் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. இந்த விசாரணைக்கு பின்னர் கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான நிறுவனங்களின் சொத்துகளில் ரூ.742 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி வைத்து அதிரடியாக உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சன் டிவி நெட்வொர்க், கல் கம்யூனிகேஷன் லிமிடெட் நிறுவனங்களின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிபதி எம்.சத்திய நாராயணன் நேற்று இந்த மனு மீதான விசாரணையை தொடங்கினார். இந்த விசாரணையின் போது, அமலாக்கத் துறை தரப்பில் வழக்கறிஞர் தண்டபாணி ஆஜராகி, ‘‘2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பாக விசாரணை செய்து வரும் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின் விசாரணையை தாமதப்படுத்தும் விதத்தில் எந்த ஒரு நீதிமன்றமும் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது’’ என சுட்டிக் காட்டினார்.
மனுதாரர்கள் தரப்பில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கபில் சிபல், பி.எஸ்.ராமன் ஆகியோர் ஆஜராகி, ‘‘இந்த வழக்குக்கும் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அமலாக்கத்துறை உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று வாதாடினர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அமலாக்கத் துறையின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்தார். மேலும், இந்த வழக்கில் 29-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.