அமெரிக்க அதிபர் தேர்தல். ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுவது உறுதி
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் வரும் நவம்பருடன் முடிவடைகிறது. புதிய அதிபரை தேர்வு செய்ய வரும் நவம்பர் 8ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட தற்போதை பிரைமரி தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக, முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனவே ஹிலாரி அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட குறைந்தது 2,383 பிரதிநிதிகளின் ஓட்டுக்களை பெற வேண்டும் என்ற நிலையில் தேவையான ஓட்டுக்களை ஹிலாரி நேற்றே பெற்றுவிட்டார். இன்னும் ஆறு மாநிலங்களில் நடைபெறும் வாக்கெடுப்பிலும் ஹிலாரிக்கு பெருவாரியான ஆதரவு கிடைக்கும் என கூறப்படுகிறது.
ஹிலாரி கிளிண்டனை எதிர்த்து குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகிவிட்டபோதிலும், சமீபத்திய கருத்துக்கணிப்பின்படி ஹிலாரி கிளிண்டன் அமோக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹிலாரி வெற்றி பெற்றால் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் இவர்தான் என்ற பெருமையை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.