வரும் 2016ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அமெரிக்க அதிபரின் மனைவியும், முன்னாள் அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுவது குறித்த தனது இறுதி முடிவை நாளை அறிவிப்பார் என செய்திகள் வெளிவந்துள்ளது.
அமெரிக்காவில் வெளியாகும் பிரபல பத்திரிகையான “வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ இதழ் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவியான ஹிலாரி, ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதி என அக்கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளதால் அக்கட்சியினர் பெரும் உற்சாகத்துடன் உள்ளனர். தற்போது வரை அதிபர் பதவிக்குப் போட்டியிட அந்தக் கட்சியைச் சேர்ந்த வேறு எவரும் விருப்பம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போதைய நிலையில் ஜனநாயக கட்சியில் ஹிலாரி அளவுக்கு செல்வாக்கு பெற்ற தலைவர்கள் இல்லை என்பதால் ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாகவே கூறப்படுகிறது.
எனினும் அதிகாரபூர்வமாக கட்சியின் நிலைப்பாடு இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
இந்த நிலையில், நியூயார்க் நகரின் புரூக்ளின் பகுதியில் உள்ள பல மாடிக் கட்டடத்தின் பெரும் பகுதியை ஹிலாரியின் ஆதரவாளர்கள் வாடகைக்கு எடுத்து தேர்தல் பிரச்சார அலுவலகமாக மாற்றி வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன.
2008-ஆம் ஆண்டு ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க நடைபெற்ற போட்டியில் அவர் இடம் பெற்றார். ஆனால், இறுதியில் அந்தக் கட்சியின் வேட்பாளராக ஒபாமா அறிவிக்கப்பட்டார். ஒபாமாவின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு நிறைவடைகிறது. அமெரிக்க சட்டப்படி, இரு முறை மட்டுமே ஒருவர் அதிபர் பதவி வகிக்க முடியும்.