அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் மன்னிப்பு கேட்டது ஏன்? பரபரப்பு தகவல்
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடையவுள்ளது. அமெரிக்காவின் அடுத்த அதிபராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படும் ஹிலாரி கிளிண்டன் தற்போது தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் ஹிலாரி அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தபோது அரசு பணிகளுக்கு தனது சொந்த இமெயிலை பயன்படுத்தியதற்காக தற்போது பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஹிலாரி கிளிண்டன் கூறியதாவது,”தனிப்பட்ட இமெயில் கணக்கை அரசுப்பணிக்கு பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும் நான் இரண்டு இமெயில் கணக்குகளை பராமரித்து வந்திருக்க வேண்டும். ஒன்றை தனிப்பட்ட தேவைகளுக்கும், மற்றொன்றை அரசுப்பணி தொடர்பானவற்றுக்கும் பயன்படுத்தி இருக்க வேண்டும். அதை செய்யாமல் இருந்தது தவறுதான். அதற்காக நான் வருந்துகிறேன். நான் அந்த தவறுக்கு பொறுப்பேற்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே அவர் மீது எழுந்தது. ஆனால் அந்த நேரத்தில் அவர் இந்த குற்றச்சாட்டை மறுத்தார். இதற்காக தான் வருத்தம் தெரிவிக்க போவதில்லை என்றும் கூறியிருந்தார். ஆனால் இந்த விஷயம் தற்போதைய தேர்தல் பிரசார களத்தில் அவருக்கு எதிராக திரும்பும் நிலை உருவான காரணத்தால் அவர் திடீரென பல்டி அடித்து, மன்னிப்பு கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.