சென்னையில் இந்து முன்னணி அமைப்பின் முக்கிய நிர்வாகி வெட்டிக்கொலை. பெரும் பதட்டம்.

chennai murderசென்னை நகரின் தொழிற்சாலை பகுதியான அம்பத்தூரில் நேற்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால், இந்து முன்னணி அமைப்பின் முக்கிய நிர்வாகி அரிவாளால்வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை காரணமாக அம்பத்தூரில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் செயலாளராக இருக்கும் சுரேஷ்குமார், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் கடை நடத்தி வியாபாரம் செய்து வருகிறார். நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் கடையை மூடிவிட்டு, வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த அவரை, அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள், அரிவாளால் ஓட ஓட வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்..

chennai murder 1சுரேஷ்குமாரை காப்பாற்ற வந்த அவருடைய நண்பர் ஒருவரின் கையையும் மர்ம நபர்கள் வெட்டிக் காயப்படுத்தினர். படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த இருவரும், சென்னை அண்ணாநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டது. ஆனால் சிகிச்சைக்கு பலனின்றி சுரேஷ்குமார் மரணம் அடைந்தார். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சுரேஷ்குமார் மரணச்செய்தி கேட்டு அந்த பகுதியில் இருந்த இந்து முன்னணி அமைப்பினர், மற்றும் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கொலையாளிகளை கண்டுபிடிக்கும் வரை மருத்துவமனையில் இருந்து சுரேஷ்குமாரின் பிணத்தை வெளியேற்ற விடமாட்டோம் என்று கூறினர். அவர்களை காவல்துறை உயரதிகாரிகள் சமாதானப்படுத்தி கொலையாளிகளை விரைவில் கண்டுபிடிப்போம் என உறுதிகூறினர்.

மேலும், இந்த கொலை தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள சி.சி.டிவி கேமராவில் பதிவாகியுள்ள கொலையாளிகளை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொலை காரணமாக சென்னையில் பதட்டம் நிலவுகிறது.

Leave a Reply