ஐஏஎஸ் ஜோடி திருமணத்திற்கு இந்துமகாசபை எதிர்ப்பு
கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐஏஎஸ் தேர்வில் முதல் இடம் பிடித்தவர் டினா தாபி அவர்களும் இதே தேர்வில் 2வதுஜ் இடம் பெற்ற அத்தர் அமீர்-உல் ஷாபி கான் என்பவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். ஆனால் இந்த திருமணத்திற்கு சில இந்து இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு டினா தாபியின் பெற்றோருகளுக்கு இந்த திருமணத்தை நிறுத்தும்படி கடிதம் எழுதியுள்ளது.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்த திருமணத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் அல்லது கானை சமாதானபடுத்தி அவரை மதம் மாற செய்யவேண்டும். உங்கள் குடும்பத்தின் இந்த முடிவு லவ் ஜிகாத்தை ஆதரிப்பதாக உள்ளது. இந்த திருமணத்திற்கு இந்த ஜோடி ஒத்து கொண்டால் கான் மத மாற்றத்திற்கு ஒப்பு கொண்ட பின்னரே திருமணம் நடக்க வேண்டும். இந்த மத மாற்ற ஏற்பாட்டிற்கு எங்கள் உறுப்பினர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்’ என்று எழுதப்பட்டுள்ளது
இந்த திருமணம் குறித்து இந்து மகா சபையின் தேசிய பொது செயலாளர் முன்னா குமார் சர்மா கூறியபோது, “யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன் தேர்வில் டினா சாதனை நிகழ்த்தியதும் எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் அவர் கானை திருமணம் செய்து கொள்ள எடுத்துள்ள முடிவு எங்களுக்கு அதிர்ச்சியையும் மிகவும் வருத்ததையும் கொடுக்கிறது’ என்று கூறினார்.
ஆனால் சமூக வலைத்தளத்தில் இந்து மகா சபைக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. திருமணம் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமை என்றும் அதில் மத அமைப்புகள் உள்பட எந்த அமைப்பும் தலையிட உரிமை இல்லை என்றும் பெரும்பாலானோர் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.