நாடு முழுவதும் இன்று மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் அவரை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு சிலை வைக்கும் முயற்சியில் ரகசியமாக இந்து மகா சபா ஈடுபட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
உத்தரபிரதேசத்தில் கோட்சேவுக்கு காந்தி மறைந்த நாளான இன்று இந்து மகா சபா சிலை வைக்க உள்ளதாகவும், கோட்சே சிலையை நிறுவும் இடத்தை அந்த அமைப்பு ரகசியமாக வைத்திருப்பதாகவும் வெளிவந்துள்ள செய்தியால் உ.பி மாநிலத்தில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
உத்தரபிரதேச போலீஸார் மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள சாலைகளுக்கும் சீல் வைத்து அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை நடத்திய பிறகே அனுமதிக்கிறார்கள். எந்த வழியிலும் யாரும் நுழைந்து சிலை வைத்து விடக்கூடாது என்பதில் போலீசார் மிகவும் விழிப்புடன் உள்ளனர்.
ஆனால் இந்து மகா சபை நிர்வாகிகள் கூறும் போதும் கோட்சேக்கு சிலை வைக்கப் போவது உறுதி. முதலில் சிலை வைத்துவிட்டு பின்னர் பத்திரிகை மற்றும் மீடியாக்களுக்கு தெரிவிப்போம் என்றனர். இதனால் மீரட் நகரில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. நகரம் முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.