20 அப்பாவி தமிழர்களை சுட்டு கொலை செய்த ஆந்திர மாநில போலீஸார்களையும், ஆந்திர முதல்வரையும் தமிழக மக்களும், தமிழக அரசியல் கட்சிகளும் கண்டத்து வரும் நிலையில், சந்திரபாபு நாயுடு கலந்து கொண்ட ஒரு திரைப்பட விழாவில் த்ரிஷா கலந்து கொண்டு அவருடன் சிரித்து பேசியதாக அவர் மீது இந்து மக்கள் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
20 தமிழர்கள் கொலை செய்யப்பட்ட ரத்தக்கறைகூட இன்னும் காயவில்லை. அதற்குள் இந்த படுகொலைக்கு காரணமாக உள்ள ஒரு மாநிலத்தின் முதலமைச்சருடன் த்ரிஷா இந்த விழாவில் கலந்து கொண்டது கண்டிக்கத்தக்கது என அவர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.
நடிகை த்ரிஷா நேற்று நடைபெற்ற ‘லயன்’ என்ற படத்தில் சந்திரபாபு நாயுடுவுடன் கலந்து கொண்டதைத்தான் இந்து மக்கள் கட்சி குறிப்பிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவை நடிகை திரிஷா புறக்கணித்து இருக்க வேண்டும் என்றும் தமிழர்கள் உணர்வுகளுக்கு எதிராக செயல்படுவதை த்ரிஷா போன்ற நடிகைகள் தொடர்ந்து செய்து வருவது கண்டிக்கத்தக்கது என்றும் இப்படிப்பட்ட நடிகைகள் தமிழ் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி ஒரு அறிக்கையின் மூலம் எச்சரித்துள்ளது.
ஒரு நாய் காரில் அடிபட்டாலே துடிதுடிக்கும் த்ரிஷாவுக்கு 20 தமிழர்களை கொன்றவர்களுடன் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்க எப்படி மனது வந்தது? என்றும் இந்து மக்கள் கட்சி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.