கமல் தன்னை பகுத்தறிவாதி என்று கூறுவது வேடிக்கையானது. ராமகோபாலன்
நடிகர் கமல்ஹாசன் நேற்று முன் தினம் தனது பிறந்த நாளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழா ஒன்றில் தான் பகுத்தறிவாதி என்றும், கடவுள் சிலையை தனக்கு காணிக்கையாக கொடுத்தால் அதை உருக்கி அந்த பணத்திலும் படமெடுப்பேன் என்றும், கடவுள் தன் முன் தோன்றினால் தமிழ் மொழியில் கடவுள் ஏன் பேசவில்லை என்றும் கேட்பேன் என்றும் ஆவேசமாக பேசியிருந்தார்.
இந்நிலையில் கமல்ஹாசனின் பேச்சுக்கு இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:
”ஒரு கலைஞனுக்கு அந்த சிலை வடிவில் உள்ள உள்ள கலை வடிவத்தை ரசிக்க தெரிய வேண்டாமா? பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டாமா? அதில் உள்ள தங்கத்தின் மதிப்பு மட்டும் தெரிந்திருந்தால் எப்படி?
கமல்ஹாசன் குழந்தைத்தனமாகவும், வேடிக்கையாகவும் பேசுகிறார். தான் கூறிய கருத்து தனக்கே உடன்பாடு இல்லாதது என்பதை அறியாதவர், தன்னை பகுத்தறிவுவாதி என்று கூறியிருப்பது வேடிக்கையானது.
கடவுளை சந்தித்தால், உலகில் ஏன் எத்தனை வேறுபாடு என இறைவனை கேட்பேன் என்று கூறும் கமல்ஹாசன், தனது அனைத்து படத்திலும் தான் எப்படி இருக்கிறாரோ? அப்படியே நடிக்க வேண்டியதுதானே. தசாவதாரம் படத்தில் பத்து மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறார். அவர் இருப்பது போலவே நடித்தால் அவருகே சலித்து விடாதா? ஆனால் உலகில் எந்த வித்தியாசமும் இருக்கக்கூடாது என்பது வேடிக்கையாக அல்லவா இருக்கிறது.
கடவுளுக்கு அனைத்து மொழிகளும் தெரியும், மௌனமும் புரியும் என்பது ஆன்றோர்கள் வாக்கு. அப்படியிருக்க இறைவனுக்கு தமிழ் தெரியாது என்று இவராக புரிந்துகொண்டு பேசுவது சிறுப்பிள்ளைத்தனமானது. அதுமட்டுமல்ல இவர் வேற்று மொழியில் நடிக்கும்போது அந்த மொழியை அறிந்துகொண்டு அந்த மொழியில் பேசி நடிப்பது இல்லையா?
அப்படி இறைவன் எல்லோருக்கும் பொதுவானன். இறைவனுக்கு செய்யப்படும் வழிபாட்டு மொழியை வைத்து அரசியல்வாதிபோல பேசி குழப்புவது ஏன்?
இப்படி அவர் பேசிய ஒவ்வொரு கருத்தும் அவருக்கே உடன்பாடாக இருக்காது என்பது அனைவருக்கும் தெரியும். அவரது பிறந்த நாளில் அவருக்கு எல்லோரும் வாழ்த்து கூறிக் கொண்டிருக்கையில்,, ஏன் இப்படி பேசி தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறார் .
விருதைத் திருப்பித் தரும் விஷயத்தில் தெளிவாக அவர் கருத்து கூறியிருப்பதை வரவேற்கிறோம்.
இவ்வாறு ராமகோபாலன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.