ஒரே வாரத்தில் 3 இந்து கோவில்கள் சூறையாடல். மலேசியாவில் பரபரப்பு
மலேசியாவில் கடந்த சனிக்கிழமை இந்து கோவில் ஒன்று சூறையாடப்பட்ட பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் நேற்று மீண்டும் இரண்டு இந்து கோவில்களில் மர்ம நபர்கள் புகுந்து கோவில் சிலைகளை கடுமையாக சேதப்படுத்தியுள்ளதால் அந்நாட்டில் பதட்டம் அதிகரித்துள்ளது.
மலேசியாவில் வசிக்கும் 28 மில்லியன் மக்களில் 8% இந்தியர்கள் என்றும் அதில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்கள் என்பதும் தெரிந்ததே. இந்துக்கள் வழிபடுவதற்காக அங்கு ஏராளமான இந்துக்கோவில்கள் உள்ளது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அரா குடா பெனான்டி எஸ்டேட் என்ற இடத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் நுழைந்த மர்ம மனிதர்கள் கோயிலில் உள்ள சிலைகளை கடுமையாக சேதப்படுத்தினார்கள். இந்நிலையில் இந்த கோயில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரம் தொலைவில் உள்ள முனீஸ்வரர் கோவிலை நேற்று மீண்டும் மர்ம நபர்கள் சூறையாடியுள்ளனர்.
முனீஸ்வரர் கோயிலை அடுத்து பட்டர்வொர்த் டவுனில் உள்ள மற்றொரு கோயிலும் சூறையாடப்பட்டுள்ளது. இதுகுறித்து கோயில் அதிகாகரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயிலில் உள்ள எந்த பொருட்களும் திருட்டுப்போகவில்லை என்பதால் கோயிலை அவமதிப்பதற்காக இந்த செயல் நடைபெற்றுள்ளதாக கோயில் அதிகாரிகள் கூறினார்கள்.