சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்று புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள ஆம் ஆத்மி கட்சியின் புதிய அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க டெல்லி காவல்துறைக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
‘டெல்லி போலீஸ்’ தோற்றுவிக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற விழாவில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் பங்கேற்று அணிவகுப்பு மரியாதை ஏற்றார்.
நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் புதிய கட்சி மக்களின் தீர்ப்பை பெற்றுள்ளது. டெல்லியில் புதிய அரசும் அமைந்துள்ளது.
நகரின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் வகையில், புதிய அரசுக்கு நீங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சி உணர்வுடன் மாநிலங்களுக்கு கட்சிப் பாகுபாடின்டி அனைத்து உதவிகளும் அளிக்கவேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு எண்ணம்.
டெல்லி மக்களுக்காக மட்டும் இதை நான் கூறவில்லை. டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக பிரதமர் கவலைப்படும் நிலையில் இதை நான் உங்களுக்கு கூறுகிறேன்” என்றார்.