அமீபியாசிஸ் நோயும்.. பூண்டு ரசமும்

garlic-667

சுடச்சுட ஒரு கப் பசும் பாலினைக் காய்ச்சி இறக்குங்கள். 3 பற்கள் வெள்ளைப் பூண்டை நசுக்கி உடனடியாக அதில் போட்டு மூடி விடுங்கள். 5 நிமிடம் கழித்து சூடு ஆறியதும் 2 ஸ்பூன் தேன் கலந்து பருகுங்கள். 1 மாதம் – 2 மாதம் இப்படி செய்து வாருங்கள். அமீபியாசிஸ் எனப்படும் குடல் கிருமி அழற்சி நோய் கட்டுப்பட்டு உடல் நலம் பெறும். பூண்டைப்பற்றி ஒரு புராணமே எழுதலாம். குடல் நோய்களைப் போக்குவதில் பூண்டுக்கு நிகர் வேறெதுவுமில்லை.

நாம் தினசரி சமையலில் பயன்படுத்தும் பூண்டுக்குப் பல்வேறு வியாதிகளைக் குணப்படுத்தும் மருத்துவத் தன்மை இருப்பது நம்மில் பலருக்குத் தெரியாமலேயே இருக்கிறது.

எகிப்திய நாகரிகத்தை உள்ளிட்ட பல்வேறு பண்டைய நாகரிகத்தில் பூண்டு ஒரு உணவாகவும், மருந்தாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அப்போதைய எல்லா நோய்களுக்குமே மருந்தாகப் பூண்டு பயன்பட்டது. மூச்சுத் திணறல் போன்ற உபாதைகளுக்கும், சரும நோய்களுக்கும் பாபிலோனியர்கள் பூண்டைப் பயன்படுத்தியதாகச் சான்றுகள் உண்டு. புகழ் பெற்ற கிரேக்க தத்துவ ஞானி அரிஸ்டாட்டில் கூட பூண்டின் பெருமைகளைப் புகழ்ந்திருக்கிறார். புரதம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் B, C இவை அத்தனையும் பூண்டில் பொதிந்திருக்கின்றன.

பூண்டின் நோய் தீர்க்கும் தன்மையில் அதன் வாசனை பெரும் பங்கு வகிக்கிறது, எனலாம். கிருமிகளைக் கொல்வது பெரும்பாலும் இந்த வாசனைதான். பூண்டு எண்ணெய்க்கு பெனிசிலின் சக்தியில் பத்தில் ஒரு பங்கு உண்டு என்பது நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை. பல்வேறு தாவரங்களின் மருத்துவத் தன்மையை ஆராய்ந்த ரஷிய ஆய்வாளர் ஒருவர் பூண்டை மருத்துவ உலகில் மிகப் பெரிய அளவில் அறிமுகப்படுத்தினார். இதனால் ரஷியன் பெனிசிலின் என்று குறிப்பிடும் அளவுக்குப் பூண்டு பிரபலம் ஆனது.

குடல் உபாதைகள், மூச்சுக் குழாயில் தொல்லை, வயிற்றில் புழு, பூச்சிகள், சரும வியாதிகள், குடற்புண் ஆகியவற்றுக்கு அருமருந்தாகிறது என்பது எகிப்து, சீனா, கிரேக்கம் ஆகிய நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. முதுமையின் அடையாளங்களைப் பூண்டு முறியடிக்கும் என்று கூறப்படுகிறது. ரத்த சுத்திகரிப்புக்குப் பூண்டு ஒரு மாமருந்து ஆகும். மூட்டு வலி, முடக்கு வாதம் போன்றவற்றுக்குப் பூண்டின் மருத்துவ உபயோகம் பலன் தரவல்லது. வலி இருக்கும் இடங்களில் பூண்டை, வெட்டித் தேய்த்தால் பலன் கிடைக்கும் என்று மருத்துவக் குறிப்புகள் கூறுகின்றன.

சிலருக்கு இயற்கையாகவே பூண்டின் வாசனைப் பிடிக்காது. எனவே அவர்கள் அதை உணவில் ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களுக்குப் பூண்டின் மருத்துவத் தன்மைகள் மறுக்கப்பட வேண்டுமா? என்றால் வேண்டியதில்லை. அவர்களுக்கும் ஏற்ற வகையில் இப்போது பூண்டு மாத்திரைகள் வந்துவிட்டன. காப்ஸ்யூல் வடிவில் கிடைக்கும் இந்த மாத்திரைகள் ஒவ்வொன்றிலும் மூன்று கிராம் பூண்டு மூடி வைக்கப்பட்டிருக்கிறது.

Leave a Reply