ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமல்ல என்று டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 2009, ஜூலை 2ல் பரபரப்பு தீர்ப்பு அளித்தது. ஓரினச் சேர்க்கைக்கு தண்டனை அளிக்கக் கூடிய இந்திய தண்டனை சட்டப் பிரிவு 377ஐயும் ரத்து செய்தது. இதை எதிர்த்து பல்வேறு மத அமைப்புகள், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இதை விசாரித்து கடந்த 11ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ‘ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் முழு சம்மதத்துடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டாலும் அது கிரிமினல் குற்றம்தான் என்று அறிவித்தது. மேலும், டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் ரத்து செய்தது. இந்த தீர்ப்புக்கு பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது. அதில், ‘அரசியல் சாசன அடிப்படை உரிமை சட்டம் 14, 15 மற்றும் 21ல் வழங்கப்பட்டுள்ள தனி மனித உரிமைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது. எனவே, ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது கிரிமினல் குற்றம் என்று டிசம்பர் 11ல் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.