இந்தியாவில் ஓரினச்சேர்க்கை சட்டப்படி குற்றம் என்ற நிலை இருந்து வந்தது. இதற்கு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 வழிவகுத்து இருந்தது. ஆனால் ஓரினச்சேர்க்கை தொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், இருவரின் சம்மதத்துடனான ஓரினச்சேர்க்கை கிரிமினல் குற்றமல்ல என்று அதிரடி தீர்ப்பு வழங்கி நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மறைந்த பாரதீய ஜனதா மூத்த தலைவர் பி.பி.சிங்கால் மற்றும் ஓரினச்சேர்க்கை எதிர்ப்பாளர்கள் மேல் முறையீடு செய்தனர். அதில், ஓரினச்சேர்க்கை சட்டவிரோதமானது, ஒழுக்கக்கேடானது, இந்திய கலாசாரத்துக்கு எதிரானது என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று உச்சநீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது. அதில், டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு அரசியல் சட்டத்திற்கு ஏற்றதாக இல்லை. டெல்லி உயர்நீதிமன்றம் இவ்விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக்கொண்டது கண்டனத்துக்குரியது. பாராளுமன்றம் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையையும் எடுக்காதது ஏன்? என கேள்வியும் எழுப்பியது. இதையடுத்து, ஓரினச் சேர்க்கை என்பது சட்ட விரோதம் என்று தீர்ப்பளித்தது. மேலும், டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் ரத்து செய்து உத்தரவிட்டது.
முன்னதாக, டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரினச்சேர்க்கை சட்டவிரோதம் என வாதிட்ட மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தனது வாதத்தை மாற்றிக்கொண்டது. இச்சட்டம் காலனி ஆதிக்கத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டது. இவ்விவகாரத்தில் சகிப்புத்தன்மை தேவை என்று வாதிட்டது.