மான்செஸ்டர் குண்டுவெடிப்பு: கல்நெஞ்சையும் கரைய வைக்கும் அதிர்ச்சி காட்சிகள்
இந்திய நேரப்படி இன்று அதிகாலை இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் நடந்த ஒரு இசைவிழாவில் பயங்கர சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பால் சம்பவ இடத்திலேயே 20 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் காயம் அடைந்தவர்களின் நிலைமை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகமாக வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பை நேரில் பார்த்த சிலர் தங்களுடைய கொடூரமான அனுபவங்களை தொலைக்காட்சியில் கூறி வருகின்றனர். எங்கு பார்த்தாலும் ரத்தம், சிதறிய உடல் பாகங்கள், ஒரே கூக்குரல், அழுகை, கதறல் இவற்றை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது என்று இளம்பெண் ஒருவர் பிபிசி தொலைக்காட்சி பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும் இந்த இசை நிகழ்ச்சிக்கு பலர் குடும்பத்துடன் குழந்தைகளுடன் வந்துள்ளனர். அவர்களில் பலர் குழந்தையை தொலைத்துவிட்டு கதறி அழும் காட்சிகள் கல்நெஞ்சையும் கரைய வைக்க்கும் அளவில் இருப்பதாக பிரிட்டன் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் பலர் தங்கள் குழந்தைகளை காணவில்லை என்றும் கண்டுபிடித்தால் கொண்டு வந்து சேர்க்கவும் என்றும் டுவிட்டரில் தங்களுடைய குழந்தைகளின் படங்களுடன் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த குண்டுவெடிப்புக்கு காரணமாக குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களை நீதியும் முன் நிறுத்தும் வரை தான் ஓயப்போவதில்லை என்று பிரிட்டன் பிரதமர் தெரஸா மே கூறியுள்ளார்.