இனி அடிக்கடி குறையுமா வீட்டுக் கடன் வட்டி?

இனி அடிக்கடி குறையுமா வீட்டுக் கடன் வட்டி?

house_loan_2235127fரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்டைக் குறைக்கும்போதெல்லாம் வங்கிகள் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கவில்லையே என்ற குறை பலருக்கும் ஏற்படும். இனி, வருங்காலங்களில் ரெப்போ ரேட் குறைத்தாலும் சரி, வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதமும் குறைக்கும் அளவுக்கு சில நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. இதேபோல் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தைக் கணக்கிடும் முறையும் மாற்றப்பட்டிருப்பதால், இனி அடிக்கடி வட்டி விகிதம் குறையவும் செய்யலாம்; கூடவும் செய்யலாம்.

வணிக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகியகாலக் கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் 0.25 சதவீதம் குறைத்தது. புதிய நிதியாண்டு தொடங்கியதும் இந்த வட்டிக் குறைப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. வழக்கமாக ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்டைக் குறைக்கும்போது, வணிக வங்கிகளுக்குக் கிடைக்கும் பலன் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பது ஒரு பொதுவான நியதி. ஆனால், ரெப்போ ரேட் குறைக்கப்படும்போதெல்லாம் வணிக வங்கிகள் வீட்டுக் கடன், வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உடனடியாகக் குறைப்பதில்லை.

கடந்த ஆண்டு நான்கு முறை ரெப்போ ரேட் குறைக்கப்பட்டபோது, ஒரே ஒரு முறைதான் எல்லா வங்கிகளும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்தன. அதுவும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் ஆகியோர் மறைமுறைமுகமாக வங்கிகளைச் சாடிய பிறகு வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ரெப்போ ரேட் குறைக்கப்பட்டப்போதும் வங்கிகளிடமிருந்து பெரிய அளவில் வட்டிக் குறைப்பு அறிவிப்பு வரவில்லை. சில வங்கிகள் வட்டிக் குறைப்பு செய்தன. ஆனால், பெரும்பாலான வங்கிகள் வட்டிக் கடன் குறைக்கவில்லை. வீட்டுக் கடனுக்கான வட்டி குறைக்கப்படும் என்று எதிர்பார்த்த வாடிக்கையாளர்கள் மிகுந்த ஏமாற்றத்துக்கு ஆளாகவும் செய்தார்கள்.

காரணம் ஆயிரம்

ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்டைக் குறைக்கும்போது, வீட்டுக் கடன், வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்காமல் இருப்பதற்கு வங்கிகள் வேறு காரணங்களைக் கூறுகின்றன. ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய காலக் கடன் தொகையை வைத்து வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடன் அளித்தால், ரெப்போ ரேட் குறைக்கும்போது கிடைக்கும் பலனை வாடிக்கையாளர்களுக்குத் தருவதில் பிரச்சினை இருக்காது. ஆனால், பல வங்கிகள் பணச் சந்தையிலிருந்தும், வாடிக்கையாளர்களிடமிருந்தும் திரட்டப்படும் தொகையைக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடன், வாகனக் கடன்களை அளிக்கின்றன. இப்படித் திரட்டப்படும் நிதி ஆதாரங்கள் மூலம் வழங்கப்படும் வீட்டுக் கடனுக்கு வட்டி விகிதத்தை எப்படிக் குறைப்பது என்ற கேள்வியும் வங்கிகள் சார்பில் எழுப்பப்படுகின்றன.

அப்படியானால், ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்டைக் குறைக்கும்போதெல்லம் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படாதா என்ற கேள்வி எழுவும் செய்கின்றன. இதுகுறித்து ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி எஸ்.கோபலகிருஷ்ணனிடம் கேட்டோம்.

வட்டிக் குறைப்புக்கு நடவடிக்கை

“சென்ற ஆண்டு ஜனவரி முதல் இப்போது ஏப்ரல் வரை 1.50 சதவீதம் ரெப்போ ரேட் குறைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு ரெப்போ ரேட் குறைக்கப்பட்டபோதும் வீட்டுக் கடன், வாகன கடனுக்கான வட்டிக் குறைப்பை பெரிய அளவில் வங்கிகள் செய்யவில்லை என்பது உண்மையே. வட்டிக் குறைப்புக்கு ஏனோ வங்கிகளுக்கு மனதில்லை. இதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. வங்கிகள் திரட்டும் ‘காஸ்ட் ஆஃப் ஃபண்ட்’க்குரிய அடக்கவிலையானது வங்கிகளுக்குக் கட்டுபடியாகவில்லை. அரசின் சிறுசேமிப்புகளுக்கான டெபாசிட்டுகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம், வங்கிகள் வழங்கும் வட்டி விகிதத்தைவிட அதிகமாக உள்ளது. அதற்கு ஈடாக வங்கிகளால் வட்டி விகிதத்தை வழங்க முடியவில்லை. அதனால்தான் அரசின் ஏழு சிறுசேமிப்புகளுக்கான திட்டங்களில் இரண்டு திட்டங்களுக்கு அண்மையில் வட்டிக் குறைப்பு செய்யப்பட்டன. எனவே வருங்காலங்களில் சிறுசேமிப்புகளுக்கு வங்கப்படும் வட்டி விகிதமும் வங்கிகள் டெபாசிட்களுக்கு அளிக்கும் வட்டி விகிதமும் ஈடாக வாய்ப்புண்டு. இதனால் வருங்காலத்தில் ரெப்போ ரேட் குறைக்கப்படும்போதெல்லாம் வங்கிகள் வட்டி விகிதத்தைக் குறைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது” என்று கூறுகிறார் கோபாலகிருஷ்ணன்.

புதிய நடைமுறை

இனி வருங்காலங்களில் அடிக்கடி வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் மாற இன்னொரு வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதுவரை வங்கிகள் அடிப்படை விகிதம் என்ற ‘பேஸ் ரேட்’ முறையில் வீட்டுக்கடனுக்கான வட்டியைக் கணக்கிட்டு வந்தன. இந்த முறையில், ஒரு சிக்கல் இருந்தது. இந்த முறையின்படி வங்கிகள் திரட்டும் நிதிக்கான வட்டி குறைந்தாலும் வீட்டுக்கடனுக்கான வட்டி குறையவே இல்லை. ‘பேஸ் ரேட்’ முறையில் வட்டியைக் கணக்கிடுவது வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கும் உதவிகரமாக இல்லாமல் இருந்தது. இதற்கு மாற்றாக ‘மார்ஜினல் காஸ்ட் ஆஃப் லெண்டிங் ரேட்’ (எம்.சி.எல்.ஆர்) என்ற முறையை பின்பற்ற ரிசர்வ் வங்கி வங்கிகளை வலியுறுத்தியது.

வங்கிகள் திரட்டும் தங்கள் நிதிகான செலவை அடிக்கடி கணக்கிட்டு, அதற்கு ஏற்ப வட்டி விகிதத்தை நிர்ணயிக்க வேண்டும் என்பதே இந்தப் புதிய முறையின் நோக்கம். இந்த புதிய முறை கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துவிட்டது. இந்தப் புதிய நடைமுறையின்படி வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் இனி அடிக்கடி மாறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது வட்டி விகிதம் அதிகரிக்கவும் செய்யலாம். குறையவும் செய்யலாம். இனி வங்கியில் டெபாசிட் வட்டி விகிதம் குறையும்போது வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதமும் குறையும். எனவே வீட்டுக் கடனுக்கான மாதத் தவணையைச் செலுத்துபவர்களுக்கு பயன் கிடைக்கும்.

வருங்காலங்களில் சிறுசேமிப்புகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதமும் வங்கிகள் டெபாசிட்களுக்கு அளிக்கும் வட்டி விகிதமும் ஈடாக வாய்ப்புண்டு. இதனால் ரெப்போ ரேட் குறைக்கப்படும்போதெல்லாம் வங்கிகள் வட்டி விகிதத்தைக் குறைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

Leave a Reply