மீண்டெழுமா வீடுகளின் விற்பனை?
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் பண மதிப்பு நீக்க அறிவிப்பு ரியல் எஸ்டேட் துறையைக் கடுமையாகப் பாதித்திருப்பது கண்கூடு. வழக்கமாக வீடு வாங்குவதற்கு முன்னர் பல்வேறு கட்டுமான நிறுவனங்களிடமும் வாடிக்கையாளர்கள் வீடுகளின் விலை நிலவரத்தைக் குறித்து விசாரிப்பதுண்டு. பணம் கொட்டிக் கிடந்தாலும், பணத்தைக் குருவிபோல் சேகரித்திருந்தாலும் வாடிக்கையாளர்கள் வீடு வாங்குவதற்கு முன்னர் இத்தகைய பல்வேறு விசாரணைகளை மேற்கொள்வதில் எந்த ஆச்சரியமுமில்லை, அது சாதாரணமானதொரு நடவடிக்கைதான். ஆனால், இந்த நடவடிக்கையை வைத்தே கட்டுமான நிறுவனங்கள் ரியல் எஸ்டேட் நிலவரம் எப்படி அமையும் என்பதை ஊகித்துக்கொள்ளும். கள நிலவரத்தை அறிந்துகொள்ள, கட்டுமான நிறுவனங்களுக்கு உதவும் அடிப்படையான தகவல் இது.
இப்படி வாடிக்கையாளர்கள் வீடு வாங்குவதற்காக மேற்கொள்ளும் விசாரிப்புகள் பாதிக்கும் மேல் குறைந்துள்ளதாகவும், வாடிக்கையாளர்கள் கட்டுமான நிறுவனங்களுக்கு வந்துசெல்வதும் முன்பு போல் இல்லை, அது பெருமளவில் குறைந்திருக்கிறது என்றும் ரியல் எஸ்டேட் துறையினர் கூறுகிறார்கள். மத்திய அரசின் பண மதிப்பு நீக்க அறிவிப்புக்குப் பிறகே இந்த நிலைமை ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள் ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்தவர்கள். கறுப்புப் பணப் பதுக்கல்காரர்கள் முதலீட்டு நோக்கில் ரியல் எஸ்டேட் துறையில் அதிக அளவில் பணத்தைப் புழங்குவதாக அனைவருமே பேசிக்கொள்கிறார்கள்.
அவர்களைப் போன்றோரும் பிற வாடிக்கையாளர்களும்கூட வீடுகளின் விலை குறைந்து விடும் என்று நம்பி, அப்போது வாங்கிக்கொள்ளலாம் என்று முடிவுசெய்து, வீடு வாங்கும் திட்டத்தை ஒத்திவைத்துவிட்டார்களோ என்று நினைக்கும் அளவிலேயே இருக்கிறது தற்போதைய சூழல்.
கீழ் நடுத்தர, நடுத்தர, உயர் நடுத்தர வகுப்பினர் எல்லோருமே வீடு வாங்குவது பற்றிய யோசனையைத் தற்காலிகமாகக் கைவிட்டிருக்கிறார்களோ என்னும் எண்ணத்தையே இந்தப் போக்கு உணர்த்துகிறது என்கிறார்கள் அத்துறையினர். அத்தகையோரிடம் வீடுகளின் விலை மேலும் குறையக்கூடும், வங்கிக் கடனுக்கான வட்டி குறையலாம், வரவிருக்கும் 2017-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் வீடு வாங்கினால் வருமான வரியில் சலுகைகள் கிடைக்கலாம் போன்ற பல எதிர்பார்ப்புகள் நிலவலாம் என்றும் ஊகிக்கிறார்கள் ரியல் எஸ்டேட் துறையைக் கூர்ந்து கவனிப்பவர்கள்.
நொய்டா பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர், புது வீடு வாங்குவது மட்டுமல்ல மறுவிற்பனை செய்வதுமே கடந்த சில நாட்களாக எதுவுமே நடைபெறவில்லை என்கிறார். வாடிக்கையாளர்கள் அனைவருமே டிசம்பர் 31-க்குப் பிறகு நிலைமை என்னவாகிறது என்பதைப் பொறுத்து வீடுகளை வாங்கலாம் என்றும் முடிவுசெய்துவிட்டதாகவே தெரிகிறது என்றும் சொல்கிறார். வழக்கமாகச் சதுர அடி ரூ.5,000 என்னும் விலைக்குப் போகும் இடங்களின் மறுவிற்பனை மதிப்பு இப்போது ரூ. 4,300 ஆகக் குறைந்திருக்கிறது என்கிறார் அவர். இவ்வளவு குறைந்துள்ளபோதும் யாருமே இந்த விலைக் குறைவைப் பயன்படுத்திக்கொள்ள முன்வரவில்லை என்பதே யதார்த்தம். இந்த நிலைமை இன்னும் சில மாதங்கள் தொடரலாம் என்றும் இவர் ஊகிக்கிறார். நொய்டா போன்ற நிலைமையே நாட்டின் பல பகுதிகளிலும் உள்ளது.
அடுத்த இரண்டு மூன்று மாதங் களுக்கு எந்த வாடிக்கையாளரும் வீடு வாங்கத் துணிய மாட்டார். அப்படித் துணிந்தாலும் அதற்கான பணத்தை அவரால் புரட்ட முடியுமா என்பது சந்தேகமே. கறுப்பு, வெள்ளை என்பதை எல்லாம் தாண்டி, புதுப் பணம் சரளமாகப் புழக்கத்துக்கு வந்த பின்னரே நினைத்த தொகையை நினைத்த நேரத்தில் புரட்ட முடியும். ஆனால், அந்த நிலைமை எப்போது வரும் என்பதை யாராலும் சட்டெனச் சொல்லிவிட முடியவில்லை.
பண மதிப்பு நீக்க நடவடிக்கைகளைத் தொடர வேண்டிய நடவடிக்கைகள் இதே அளவு கடுமையாக மேற்கொள்ளப் படாவிட்டால் அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் பணப் புழக்கம் சரியாகிவிடும் என்று அவர்கள் நம்புகிறார்கள். முத்திரைக் கட்டணம், ரியல் எஸ்டேட் துறை மீதான முறையான கண்காணிப்பு போன்ற நடவடிக்கைகளும் பண மதிப்பு நீக்க நடவடிக்கைகளுடன் இணைந்து செயல்படாவிட்டால் பண மதிப்பு நீக்கம் மட்டும் கறுப்புப் பணத்தை ஒழித்துவிடாது என்று அவர்கள் கருதுகிறார்கள். எப்படியோ இந்த மாதம் இறுதியில் தொடங்கி, இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் நிலைமை சரியாகி, வீடுகள் விற்பனையாகத் தொடங்கிவிடும் என்பதே அவர்களது நம்பிக்கை.
அடுத்த இரண்டு, மூன்று மாதங்களுக்கு எந்த வாடிக்கையாளரும் வீடு வாங்கத் துணியமாட்டார். அப்படித் துணிந்தாலும் அதற்கான பணத்தை அவரால் புரட்ட முடியுமா என்பது சந்தேகமே. கறுப்பு, வெள்ளை என்பதை எல்லாம் தாண்டி, புதுப் பணம் சரளமாகப் புழக்கத்துக்கு வந்த பின்னரே நினைத்த தொகையை நினைத்த நேரத்தில் புரட்ட முடியும்.