111 பந்தில் 175 ரன்கள். போதையில் அடித்ததாக பிரபல கிரிக்கெட் வீரர் தகவல்
வரலாற்று சிறப்பு மிக்க சேஸிங்கில் 111 பந்தில் 175 ரன்கள் விளாசும்போது பாதி போதையில் இருந்ததாக தென்ஆப்பிரிக்க வீரர் கிப்ஸ் தெரிவித்துள்ளார்.
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் மறக்க முடியாத போட்டிகளில் 13-3-2006 அன்று தென்ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான போட்டியும் ஒன்று.
இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 434 ரன்கள் குவித்தது. இவ்வளவு பெரிய ஸ்கோரை தென்ஆப்பிரிக்கா அணியால் சேஸிங் செய்ய இயலாது என்று எல்லோரும் நினைத்திருப்பார்கள்.
ஆனால் ஸ்மித் (55 பந்தில் 90 ரன்), கிப்ஸ் (111 பந்தில் 175 ரன்), பவுச்சர் (அவுட்டாகாமல் 43 பந்தில் 50 ரன்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் தென்ஆப்பிரிக்கா அணி 49.5 ஓவரில் 438 ரன்கள் எடுத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் சரித்திர சாதனை வெற்றியை ருசித்தது.
21 பவுண்டரி, 7 சிக்சருடன் 111 பந்தில் 175 ரன்கள் குவித்த கிப்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளார். இவர் தனது சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டுள்ளார். ‘To the Point: The No-holds barred Autobiography’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த புத்தகத்தில் 175 ரன்கள் அடிக்கும் வரை நான் பாதி போதையில் இருந்தேன் என ஒளிவு மறைவு இல்லாமல் தெரிவித்துள்ளார்.
போட்டி தொடங்குவதற்கு முந்தைய நாள் இரவு பார்ட்டியில் கலந்து கொண்ட கிப்ஸ் நள்ளிரவு 1 மணி வரை குடித்துள்ளார். அத்துடன் அங்கேயே படுத்துவிட்டார். இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்திருந்த மைக்கேல் ஹஸ்சி ‘‘இரவு நான் பிரேக்கனுடன் சாப்பிட சென்றேன். அப்போது மூன்று மணி நேரம் ஒரே இடத்தில் கிப்ஸ் இருந்தார்’’ என்று தெரிவித்துள்ளார்.
காலையில் எழுந்த கிப்ஸ்-க்கு சரியாக போதை தெளியவில்லை. பாதி போதையிலேயே இருந்தார். அந்த மயக்கத்துடன் களம் இங்கிய கிப்ஸ் பந்துகளை விளாசி ஆட்ட நாயகன் விருது பெற்றதுடன், அணியை வரலாற்று சாதனை படைக்கச் செய்துள்ளார்.