பண்டை காலத்தில் ஆகம சாஸ்திர முறைப்படி கோயில்கள் கட்டப்பட்டன. அந்த கோயில்கள் அமைந்துள்ள இடங்களில் எல்லாம், ஏதேனும் ஒரு அற்புதம் நிகழ்ந்திருக்கும். அதனாலேயே அவ்விடங்கள் ஆலயங்கள் கட்ட உகந்தவையாக கருதப்பட்டன. குறிப்பாக, எவரேனும் சித்தி பெற்ற இடம், இறையருள் பெற்ற இடம், இறைவன் காட்சி தந்த இடம், தேவர், முனிவர், ரிஷிகள், ஞானியர் தவம் செய்த இடம் என ஏதோ ஒரு வகையில் சிறப்பு பெற்றிருக்கும் இடங்களில் மட்டுமே ஆலயங்கள் அமைக்கப்பட்டன.
சித்தர்கள், ஞானிகள், முனிவர்கள் போன்றோர், பெரிய மரங்களின் அடியில் அமர்ந்துதான் தவம் செய்தனர். எந்த மரங்களின் கீழ் அமர்ந்து தவம் செய்தால் பலன் சித்திக்கும் என்பதையும்; எந்தெந்த மரங்களின் கீழ் எந்தெந்த தேவதைகளைத் தியானிக்க வேண்டும்; மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்; என்பதையும் அறிந்து அதன்படி செய்தனர்.
இப்படி, மரங்களின் கீழிருந்து நீண்ட காலம் தவம் அல்லது தியானம் செய்து சித்தி அடைந்தனர். அவர்கள் வழிபட்ட அத்தல மரங்கள், அத்தலத்துக்கு உரிய மரங்களாகப் போற்றப்பட்டு வழிபடப்பட்டன. இப்படித்தான் ஒவ்வொரு தலத்துக்குரிய மரமும், “தலவிருட்சம்’ எனப்பெயர் பெற்றன.