கோடை வெயிலை சமாளிப்பது எப்படி?

கோடை வெயிலை சமாளிப்பது எப்படி?

summerகடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் சென்னை உள்பட பல தமிழக நகரங்கள் வெள்ளத்தில் மிதந்த நிலையில் தற்போது அதற்கு நேர்மாறாக கடுமையான கோடை வெயில் அடித்து வருகிறது. இந்நிலையில் கோடை வெயிலில் இருந்து தப்பிப்பது எப்படி என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

கோடைக் காலத்தில் பொதுவாக வியர்க்குரு, வேணல்கட்டி, அம்மை, நீர்க் கடுப்பு, நீர் எரிச்சல், நீர்த்தாரை புண், அதிவியர்வை, பொன்னுக்கு வீங்கி, மஞ்சள் காமாலை, மூல நோய், ஆசன வாய்ப் புண், மலச்சிக்கல், வாய்ப்புண், வயிற்றுப் புண், உடலில் அரிப்பு, தடிப்பு போன்ற பல்வேறு நோய்கள் வரலாம். இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் எந்த நோயையும் வெல்லலாம்.

அம்மை நோய்கள்

நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருப்பவர்களுக்குத்தான் (Immunity) அம்மை மட்டுமல்ல, மற்ற நோய்களும் வருகின்றன.

பெரியம்மை (Small Pox)

இது அனைவருக்கும் வரக்கூடியது. வேரியோலா வைரஸ் என்ற கிருமி இந்நோயை பரப்புகிறது. எளிதில் தொற்றக்கூடியது, பரவக்கூடியது; திடீரென காய்ச்சல் அடிக்கும்; காய்ச்சலுடன் மூக்கிலிருந்து நீர் வடிதல், தும்மல், கை, கால் மூட்டு வலி; தலை வலி, தலை பாரம், முதுகு வலி; குமட்டல், வாந்தி, கண்கள் சிவந்திருத்தல், அடிவயிறு மற்றும் தொடை இடுக்குகள், அக்குளில் சிவந்து, சிறு சிறு பருக்கள் காணப்படுவது போன்றவை இதன் அறிகுறிகள்.

மூன்றாம் நாள் காய்ச்சல் குறையும். இந்நாளில் சிறுசிறு பருக்கள் முகத்தில் தோன்றி பின்னர் மணிக்கட்டு, உடலின் மற்ற பாகங்களிலும் பரவும். இந்நோயானது ஒன்று முதல் இரண்டு வாரங்கள்வரை நீடிக்கும்.

இந்நோயின் தீவிரத்தில் கண் பார்வை பாதிப்பு, கை, கால் மூட்டு வீங்குதல்; நுரையீரல் தொற்று அல்லது நிமோனியா, தோல் அலர்ஜி, மூளை பாதிப்பு போன்றவை ஏற்படலாம்.

சின்னம்மை (Chicken Pox)

வேரிசெல்லா ஜூஸ்டர் எனும் வைரஸ் கிருமியால் ஏற்படுவது. பெரியம்மையைப் போலவே இதுவும் தொற்றி, பரவக் கூடியது; இந்நோயானது விளையாட்டு பருவத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கு வருவதால் இதை விளையாட் டம்மை என்றும் அழைப்பார்கள்.

காய்ச்சல், தலைவலி, சோம்பல், முதுகுவலி, உடல் வலி போன்றவை தோன்றி, மூன்றாம் நாள் பருக்கள் தோன்ற ஆரம்பிக்கும். கழுத்தின் முன் பகுதி, மார்புப் பகுதி, பின் உடல் முழுமையும் பரவும். முதலில் பருக்கள் சிறு சிறு கொப்புளங்களாகத் தோன்றி, மினுமினுப்புடன் நீர்கோத்துக் காணப்படும். நாளுக்கு நாள் வளரும். பின் 10 முதல் 20 நாட்களுக்குள் பருக்கள் காய்ந்து உதிர ஆரம்பிக்கும். பின்னர் தோல் பழைய நிறத்தை அடையும்.

இந்நோயின் தீவிரத்தில் தோல் அலர்ஜி, மூளை, நரம்பு பாதிப்பு; நுரையீரல் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, கை, கால் மூட்டு வலி, நிமோனியா, சில வேளை தோலில் ரத்தக்கசிவு போன்றவை ஏற்படலாம்.

தட்டம்மை (மணல்வாரி – Measles)

மீஸல்ஸ், ரூபெலா வைரஸ் அல்லது ஆர்.என்.ஏ. வைரஸ் கிருமியால் வருவது. அதிவேகமாகப் பரவக்கூடியது, தொற்றக்கூடியது; மூக்கிலிருந்து சீழ் வடிதல், தும்மல், இருமல், கண்கள் சிவந்திருத்தல், கண் எரிச்சல் உண்டாகி காய்ச்சல் வந்து, செம்மண் நிறத்தில் சிறு சிறு பருக்கள் காதின் பின்புறம், கழுத்தின் பக்கவாட்டுப் பகுதி, முகத்திலும் தோன்றி, பின் உடல் முழுவதும் பரவக்கூடியது. இந்நோய் பத்து முதல் பதினான்கு நாட்களுக்கு இருக்கும்.

இந்நோயின் தீவிரத்தில் பார்வை பாதிப்பு, கழிச்சல், தோல் அலர்ஜி, கை, கால் எரிச்சல், செவி நோய், கழுத்தில் கட்டிகள், நிமோனியா, நுரையீரல் பாதிப்பு, மூளை, நரம்பு பாதிப்பு போன்றவை ஏற்படலாம்.

பூட்டுத்தாள் அம்மை (அ) பொன்னுக்கு வீங்கி

பாராமிக்ஸோ வைரஸ் கிருமியால் உண்டாகக் கூடியது. தாடையின் இரண்டு பக்கங்களிலும் உள்ள பரோடிட் கிளான்சில் தொற்று உண்டாகி வீக்கம் ஏற்பட்டு, வலி ஏற்படுத்தக்கூடிய நோய் இது. இந்நோயில் தாடையின் கீழ் வீங்குவதால், இதை பூட்டுத்தாளம்மை என்று கூறுவார்கள். ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவும் தன்மை உடையதால், இதையும் அம்மை நோயுடன் ஒப்பிட்டு அழைப்பார்கள்.

மூன்று நாட்களுக்கு காய்ச்சல் லேசாக இருந்து, பின்னர் குறைந்து தாடையை அடைக்க முடியாமல் செய்யும். வீங்கிக் காணப்படும்; வலி இருக்கும்; வாயைத் திறக்க முடியாது. மிக எளிதில் பரவக்கூடியது. இருமல். தும்மல் வழி காற்றில் பரவும். இரண்டு, முதல் மூன்று வாரங்களுக்கு நீடிக்கும்.

இந்நோயின் தீவிரத்தில் மூளை பாதிப்பு, விரை வீக்கம், விந்து உற்பத்தி நாசம், கணைய வீக்கம், சினைப்பை வீக்கம், கல்லீரல் பாதிப்பு, தைராய்டு வீக்கம், இதய பாதிப்பு, கை, கால் எரிச்சல் போன்றவை ஏற்படலாம்.

நீர்க் கடுப்பு, நீர் எரிச்சல்

அதிக வெப்பம், வெயிலில் வெகுநேரம் இருப்பது, நிற்பது, நடப்பது, உட்கார்ந்திருப்பது. குறைந்த அளவே தண்ணீர் குடிப்பது, சிறுநீரை அடக்குவது, காரவகை உணவு, எண்ணெய் பதார்த்தங்கள், தரமற்ற குளிர்பான வகையைப் பயன்படுத்துவது, மொட்டை மாடியில் தரையில் படுத்து உறங்குவது, அளவுக்கு மீறி மது, புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவது, நீரிழிவு, சதையடைப்பு போன்ற பல்வேறு காரணங்களால் நீர்க் கடுப்பு, நீர் எரிச்சல் ஏற்படும். பெண்களுக்கு மாதாந்திரத் தொற்று இருந்தாலும், மேற்கண்ட அறிகுறிகள் காணப்படும்.

அதிவியர்வை

அதிகச் சூடு, காற்றோட்டமில்லாமல் இருப்பது, அதிகச் சூட்டோடு உணவை உட்கொள்வது, மலக்கட்டிகள், நுரையீரல் பாதிப்பு, இதய பாதிப்பு, சர்க்கரை அளவு குறைதல், ரத்தஅழுத்தம் குறைதல், மாரடைப்பின் முன்குறி, பயம் போன்றவற்றால் அதிவியர்வை ஏற்படலாம்.

மஞ்சள் காமாலை

அசுத்தமான குடிநீரைக் குடிப்பது, சுகாதாரமற்ற, சரியாக வேகாத உணவை உட்கொள்வது, தரமற்ற குளிர்பானங்கள், மது, புகையிலையை அதிகமாகப் பயன்படுத்துவது, வைரஸ் தொற்றுக் கிருமிகள், கலப்பட உணவு – திண்பண்டங்களை உண்பது, கல்லீரல் பாதிப்பு போன்றவற்றால் மஞ்சள் காமாலை வரலாம்.

வாய்ப் புண், வயிற்றுப் புண்

மிகவும் சூடாக சாப்பிடுவது, சாப்பிடாமல் பட்டினி இருப்பது, நேரம் தவறிச் சாப்பிடுவது, நோய்த்தொற்றுக் கிருமிகளாலும், சத்துக் குறைபாடு, மருந்துகளின் ஒவ்வாமை, நீண்ட நாட்கள் மருந்து சாப்பிடுவது, தீராத மலக்கட்டு, தூக்கம் கெடுவது, மது, புகையிலையைப் பயன்படுத்துவது போன்ற கணக்கற்ற காரணங்களாலும், அதிக சூடு, மனக்கவலையாலும் வாய்ப் புண், வயிற்று்ப் புண் ஏற்படலாம். புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாகக்கூட இருக்கலாம்.

மலக்கட்டு, மூலம்

அதிக வெப்பம், நேரம் தவறி சாப்பிடுவது, நேரம் தவறித் தூங்குவது, இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பது, அதிக காரம் சேர்த்த சைவ, அசைவ உணவை உண்பது, அதிக மது, புகையிலைப் பயன்பாடு, குறைந்த அளவே உணவு உண்பது, அடிக்கடி விரதமுறைகளை கடைப்பிடிப்பது, ஒருசில நோய்களுக்காக நாள்பட எடுத்துக்கொள்ளப்படும் மருந்துகள், ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது, அடுப்பின் முன் நீண்ட நேரம் நிற்பது போன்றவற்றால் தீராத மலக்கட்டு, மூல நோய் ஏற்படலாம்.

வெயிலுக்கு மருந்து…

மேற்கண்ட நோய்கள் கோடைக்காலத்தில் ஏற்பட வாய்ப்புண்டு. இவை வராமலும், வந்தபின் தீர்க்கவும் கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றினால், கோடை வெயிலுக்கு அஞ்ச வேண்டியதில்லை:

>> காலை எழுந்தவுடன் 200 மி.லி. குளிர்ந்த நீரைக் குடிக்க வேண்டும்.

>> பழைய சோறு, நீராகாரம் மிகச் சிறந்தது.

>> இளநீர், பதநீர் குடிக்கலாம்.

>> தர்பூசணி, திராட்சை, வெள்ளரி, நுங்கு சாப்பிடலாம்.

>> எலுமிச்சை சாறு, நன்னாரி சர்பத் (இயற்கையானது, வெறும் சர்க்கரைக் கலவை அல்ல) அருந்தலாம்.

>> கார வகை உணவு, தின்பண்டங்கள், அசைவ உணவைத் தவிர்க்கலாம்.

>> கேக், பப்ஸ், துரித உணவைத் தவிர்க்கலாம்.

>> குளிர்பானங்களைத் தவிர்த்துக் குளிர்ந்த நீரை, மண்பானை நீரைக் குடிக்கலாம்.

>> காலை, இரவு இரு வேளை குளிக்கவும்.

>> உடலில் சந்தனம் பூசிக் குளியுங்கள்.

>> கை, கால் முகத்தை ஒரு நாளைக்கு நான்கு, ஐந்து முறை குளிர்ந்த நீரால் கழுவிக்கொள்ளவும்.

>> தயிரைக் கடைந்து வெண்ணெய் நீக்கப்பட்ட மோரை நிறைய குடிக்கலாம்.

>> இறுக்கமாக ஆடை அணிவதைத் தவிருங்கள்.

>> பருத்தி ஆடைகளை அணியுங்கள்.

>> மது, புகையிலைப் பொருட்களைத் தவிருங்கள்.

>> பொதுவாகவே வீடும் அலுவலகமும் காற்றோட்டமாக இருக்க வேண்டும், குறிப்பாக ஹாலும் படுக்கை அறையும்.

>> பிளாஸ்டிக், இரும்பு, ஃபோம் இருக்கை, படுக்கைகளைப் பயன்படுத்தாதீர்கள்.

>> தலைக்கு தினமும் எண்ணெய் வைத்துக்கொள்ளுங்கள்.

>> வாரம் இரண்டு முறை எண்ணெய் தேய்த்துக் குளியுங்கள். உடல் சூடு கட்டுப்பாட்டில் இருக்கும்.

>> எண்ணெய் தேய்த்து குளிக்கும் நாளில் தயிர், குளிர்பானம், மீன், இறால் சாப்பிட வேண்டாம்.

>> மலக்கட்டு இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

>> இரவில் நீண்ட நேரம் கண் விழிக்காதீர்கள்.

>> பட்டினி, விரத முறைகளைத் தவிருங்கள்.

>> மனதை லேசாக வைத்துக்கொண்டு, கோடை வெயிலைக் கட்டுப்படுத்தி நலமாக வாழுங்கள்.

Leave a Reply