தீபாவளி என்றாலே கொண்டாட்டம்தான். பட்டாசு, புது டிரெஸ், ஸ்வீட்ஸ் என ஒட்டுமொத்தக் குடும்பமும், உற்சாகம் ஆகிவிடும். மகிழ்ச்சியோடு தொடங்கும் பண்டிகை, முடியும்போது சிலருக்கு மட்டும் சோகத்தை ஏற்படுத்திவிடும். பலகாரங்கள் சுடுவது, பட்டாசு வெடிப்பது என அதிகம் நெருப்போடு விளையாடும் பண்டிகை என்பதால், கொஞ்சம் கவனமாக இருந்து கொண்டாட்டத்தை நீட்டிப்போம்.
பாதுகாப்பான தீபாவளிக்கு சில ஆலோசனைகளை வழங்குகிறார் டாக்டர் ஜெகன் மோகன். வருடந்தோறும் தீபாவளியில் தீக்காயங்களோடு வருபவர்களுக்கு சிகிச்சையளிக்கும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின், தீக்காயம் மற்றும் பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை துறைத் தலைவர் இவர்.
என்ன உடை அணியலாம்?
பட்டாசு வெடிக்கும்போது பருத்தி ஆடைகளை அணியலாம். ஆனால், அது மெலிதாக இருக்கக் கூடாது.
ஜீன்ஸ் ஆடைகள் நல்லது. எளிதில் தீப்பிடிக்காது.
முழுக்கை ஆடைகளைத்் தவிர்க்கலாம்.
நைலான், சிந்தடிக், நீண்ட ஸ்கர்ட், லூஸ் பைஜாமா, வேட்டி போன்ற ஆடைகளையும் அணியக் கூடாது.
காலில் தீக்காயம் படாமல் இருக்க பட்டாசு வெடிக்கும்போது, கட்டாயமாக காலணிகளை அணிய வேண்டும். ஹீல்ஸ் செருப்புகளைத் தவிர்க்கவும். ஓடி வரும்போது கீழே விழுந்திட வாய்ப்புகள் அதிகம்.
பட்டாசுக்கு எக்ஸ்ட்ரா கவனம் தேவை
நீண்ட ஊதுபத்திகளைப் பயன்படுத்தவும். மத்தாப்பு போன்ற பட்டாசுகளைப் பற்றவைக்க, விளக்குகளைத் தவிர்த்து, மெழுகுவத்தி பயன்படுத்தலாம். மெழுகுவத்தி கீழே விழுந்ததும் அணைந்துவிடும். விளக்குகளின் எண்ணெய் தீயை அதிகம் பரவச்செய்துவிடும்.
குடிசைகளில் வசிப்போர், வீட்டுக் கூரைகளில் தண்ணீரை ஊற்றி ஈரமாக வைத்திருக்கலாம். இதனால் ராக்கெட் விழுந்தாலும் எளிதில் தீ பற்றாது. எப்போதும் பெரிய வாளியில் தண்ணீர் நிரப்பி வைத்திருப்பது நல்லது.
நெருக்கமான இடங்களைத் தவிர்த்து, திறந்தவெளியில் சென்று வெடிகளை வெடிக்க வேண்டும்.
ராக்கெட்டை மண்ணில் புதைத்துக் கொளுத்தக் கூடாது. காலி பாட்டிலில் வைத்துத்தான் கொளுத்த வேண்டும். குடிசைகள், குடில்கள் அருகிலிருந்தால் எளிதில் தீப்பற்ற வாய்ப்புள்ளது.
புஸ்வாணம். சங்குசக்கரம் போன்ற பட்டாசுகளை ஒரே நேரத்தில் அருகருகே வைத்து வெடிக்கக் கூடாது.
பட்டாசுகளை ஆடைகளின் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாக எடுத்து வெடிப்பது, கைகளில் பிடித்தபடி வெடிப்பது கூடவே கூடாது.
பட்டாசுக்கு நேராக முகத்தை வைத்திருக்கக் கூடாது. திடீரென்று தீப்பிடித்து வெடித்தால், முகத்தில் காயங்கள் ஏற்படும்.
வெடிக்காத வெடிகளை ஒன்றுசேர்த்து மொத்தமாக நெருப்புவைத்து எரிக்கக் கூடாது. எதிர்பாராதவிதமாக வெடித்துச் சிதற நேரிடலாம். சில வெடிகள் வெடிக்காமல் புகை மட்டும் வந்துகொண்டிருந்தால் அவற்றின் மேல் தண்ணீரை ஊற்றிவிடுங்கள். எரிந்துவிட்ட மத்தாப்புகள், தீக்குச்சிகள் போன்றவற்றை நீர் நிறைந்த வாளியில் போட்டுவிடுங்கள். கீழே எரிவதால், எவரேனும் மிதித்துவிட வாய்ப்புள்ளது.
குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது பெரியவர்கள் தண்ணீர் வாளியுடன் உடனிருப்பது அவசியம்.
தீக்காயம் பட்டால் முதலுதவி என்ன?
தீக்காயம் பட்ட இடத்தில் உடனடியாக தண்ணீரை ஊற்ற வேண்டும். ஏனெனில், வெப்பத்தினால் ஏற்படும் தீயின் ஆழம் அதிகரிப்பதைத் தவிர்க்கலாம். பிறகு, சுத்தமான வெள்ளை பருத்தித் துணியில் அந்தக் காயத்தைப் போர்த்தி, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். தீக்காயத்தில் சுய மருத்துவம் செய்யவே கூடாது.
இங்க் தடவுதல், சாக்கு போட்டுத் தீயை அணைத்தல், வாழைச் சாறு தடவுதல், ஐஸ் வைத்தல், ஆயின்மென்ட் பூசுதல், மஞ்சள் தேய்த்தல் போன்றவற்றைச் செய்யக் கூடாது.
சங்கீதா, சித்த மருத்துவர்
கடைகளில் வாங்கி பலகாரங்களைச் சாப்பிடுவதைவிட வீட்டில் செய்து சாப்பிடுவது நல்லது. ஏனெனில், வீட்டில் செய்யும் இனிப்புகளில் வெல்லம், கிராம்பு, சுக்கு, ஏலக்காய் போன்ற உடலுக்கு நன்மை தரும் பொருட்களைச் சேர்ப்போம். இதைக் கடைகளில் வாங்கும் இனிப்புகளில் எதிர்பார்க்க முடியாது. கூடவே, பலகாரம் செய்யும் எண்ணெய் சுகாதாரமாக இல்லையெனில், மொத்த தீபாவளி சந்தோஷமும் காலியாகிவிடும்.
சாப்பிட்ட உணவுகள் எளிதில் ஜீரணம் ஆக, மூலிகை டீ குடிப்பது நல்லது. இஞ்சி, லவங்கம், பட்டை தலா 1, கிராம்பு, ஏலக்காய் தலா 2, மிளகு 10 இவற்றை அரைத்து 2 கப் நீரில் போட்டு கொதிக்க வைத்து தேன் (அ) பனை வெல்லம் சேர்த்து தயாரிப்பதே மூலிகை டீ.
தீபாவளிக்கு இனிப்புகள் அதிகம் சாப்பிடுவதால், நெஞ்சு எரிச்சல் இருக்கும். இதற்கு சீரகம், தனியா, பெருஞ்சீரகம் ஆகியவற்றை சம அளவில் எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்கவிட்டு கருப்பட்டி சேர்த்துக் குடிக்கலாம்.
புதினா இலை, சீரகம், பிளாக் சால்ட்(கறுப்பு உப்பு) போட்டு, தண்ணீரைக் கொதிக்கவிட்டுக் குடித்தால், அஜீரணக் கோளாறுகள் நீங்கிவிடும்.
எண்ணெய் பலகாரங்களை அதிகம் சாப்பிடும் போது, வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம். இதைத் தவிர்க்க, சுண்டைக்காய் வற்றல் ஒரு கைப்பிடி, ஒமம் ஒரு டீஸ்பூன், வெந்தயம் அரை டீஸ்பூன், சிறிதளவு கறிவேப்பிலை இவற்றை வறுத்துப் பொடியாக்கி உப்பு சேர்த்து மோருடன் குடிக்கலாம்.
வாயுத் தொல்லை பிரச்னை சிலருக்கு வரும். அவர்கள் மிளகு, சீரகம், சுக்கு, ஒமம், கருஞ்சீரகம், பெருங்காயம் இவற்றை வெந்நீரில் கொதிக்க விட்டு பிளாக் சால்ட் கலந்து குடிக்கலாம்.
டாக்டர் குணசேகரன், டீன், கே.எம்.சி மருத்துவமனை
‘கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது, கே.எம்.சி மருத்துவமனையில் தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்றவர்களில், பத்து சதவீதத்தினர் பெரிய காயத்துடன் வந்தார்கள். இதில், சிறுவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். குழந்தைகளிடம் பெரிய வெடிகளைக் கொடுக்க வேண்டாம். புஸ்வாணம் சில நேரங்களில் வெடித்துவிடும் அபாயம் இருப்பதால், பெரியவர்கள் அருகில் இருப்பது அவசியம்.
இந்த வருடம், பட்டாசுக் காயம்பட்டு வருவோருக்கு சிகிச்சை செய்வதற்காக, மருத்துவர்களும் செவிலியர்களும் தயார் நிலையில் உள்ளனர். நோயாளிகளுக்கு எனக் கூடுதலாக படுக்கைகள், மருந்துகள் மற்றும் மற்ற வசதிகள் தீபாவளிக்காக செய்யப்பட்டுள்ளன. தீபாவளி நேரத்தில் இந்தப் படுக்கைகள் காலியாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் ஆசை” என்கிறார்.