நீரில் மூழ்கியவருக்கு முதலுதவி எவ்வாறு செய்வது ?

images (1)

நீச்சல் தெரியாதவர்கள் ஆற்றிலோ, குளத்திலோ, கடலிலோ குளிக்கச் சென்று, தண்ணீரின் வேகத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல், தத்தளித்துத் தடுமாறி, தண்ணீரில் மூழ்கி விடுவதைச் செய்திகளில் படித்திருப்பீர்கள்.

நீர் நிலைகளில் ஏற்படும் ஆபத்தின்போது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நீச்சல் தேவைப்படுகிறது. பொதுவாக, குழந்தைகளுக்கு ஐந்து வயதில் நீச்சல் கற்றுத்தர ஆரம்பிக்கலாம். பதினெட்டு வயதுக்குள் நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு உடலின் எடை கூடிவிடும். மூட்டுகளில் அசையும் தன்மையும் நெகிழ்வுத் தன்மையும் குறைந்துவிடும். இந்தக் காரணங்களால், நீச்சல் கற்றுக்கொள்வது கடினம். பத்து வயதுக்குள் ஒருவர் நீச்சல் கற்றுக் கொண்டால், அவர் தனக்கு ஒரு சொத்து சேர்த்து வைத்ததற்குச் சமம். இது பற்றிய விரிவாக இன்று ஒரு தகவலில் பார்க்கலாம் .இது உங்களுக்கு நிச்சையம் பயனுள்ளதாக இருக்கும்

நீச்சல் பயிற்சியின் நன்மைகள்:

நீச்சல் பயிற்சி என்பது ஒரு காற்றலைப் பயிற்சி. நுரையீரல் வலுப்பெறுவதற்கும் இதயத்தில் ரத்த ஓட்டம் சீராக இயங்குவதற்கும் நீச்சல் பயிற்சி நன்கு உதவுகிறது. தொடர்ந்து நீச்சல் பயிற்சி செய்து வருபவர்களுக்கு எலும்பு மூட்டு தொடர்பான நோய்கள் வருவது குறைகிறது. முக்கியமாக முதுகுவலி, கழுத்துவலி, முழங்கால் மூட்டுவலி போன்றவை பாதிக்காது. மன அழுத்தம் உள்ளவர்கள் தினமும் நீந்துவதைப் பழக்கப் படுத்திக் கொண்டால், மன அழுத்தம் குறைந்து, நாள் முழுவதும் உற்சாகமாகப் பணி செய்வார்கள். ’டௌவுன் சின்ட்ரோம்’ போன்ற மனநலக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கும் நீச்சல் ஒரு நல்ல பயிற்சியே. சிறு வயதிலிருந்தே நீச்சல் பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு உடல் தசைகள் நல்ல வலுவுடன் இருக்கும். ஆரோக்கியம் கைகூடும்.

யாருக்கு நீச்சல் பயிற்சி ஆகாது?

வலிப்பு நோய் உள்ளவர்கள் நீச்சல் பயிற்சி செய்யாமல் இருப்பது நல்லது. காரணம், தண்ணீரில் வலிப்பு வந்தால் உயிருக்கு ஆபத்து வந்து சேரும். அவர்களைத் தண்ணீரிலிருந்து சமாளித்துக் கரை சேர்ப்பதும் கடினம். அதுபோல் மாற்றுத் திறனாளிகள், ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள், இதயநோயாளிகள், பிறவி இதயக் குறைபாடு உள்ள குழந்தைகள், ஆஸ்துமா போன்ற சுவாசம் தொடர்பான ஒவ்வாமை நோய் உள்ளவர்கள் நீச்சல் பயிற்சி செய்யக்கூடாது.

நீச்சல் பயிற்சியில் பெற்றோர் பங்கு என்ன?

குழந்தைக்கு நீச்சல் கற்றுத்தர வேண்டும் என்று தீர்மானித்து விட்டால், பயிற்சிக்குத் தேவையான உடல் தகுதி குழந்தைக்கு உள்ளதா என்பதை மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். வீட்டுக்கு அருகில் உள்ள நீச்சல் குளம் பயிற்சிக்கு உகந்தது. அதில் நீச்சல் கற்றுக் கொள்வதற்கு வசதியாக குறைந்த அளவு ஆழம், நல்ல அகலம், தூமையான தண்ணீர், சுழற்சி முறையில் தண்ணீர் வெளியேற்றப்படும் வசதி, மிதவை போன்ற கருவிகள் முதலியவை அவசியம் இருக்க வேண்டும். எட்டுக் குழந்தைகளுக்கு ஒரு பயிற்சியாளரும், அனுபவமிக்க லைஃப் கார்டும் இருக்கிறார்களா என்பதைப் பெற்றோர் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். நீச்சல் பயிற்சியின்போது அப்பா, அம்மா,தாத்தா, பாட்டி, மாமா என்று உறவினர் யாராவது உடனிருக்க வேண்டும். டிரைவர், வேலையாள் போன்றவர்களை அனுப்பக்கூடாது.

நீரில் ஏற்படும் ஆபத்து:

குளத்தில் அல்லது கடலில் குளிக்கும்போது, படகில் செல்லும்போது, நீச்சல் பயிற்சியின்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கிவிடலாம். நீந்தத் தெரியாதவர்கள் அப்போது வேகமாக சுவாசித்து, தண்ணீரைக் குடித்து, திக்குமுக்காடுவார்கள். இந்த நிலைமையில் நுரையீரலுக்குள் தண்ணீர் புகுந்துவிடும். காற்று இருக்க வேண்டிய இடத்தில் இப்போது தண்ணீர் இருப்பதால், மூளைக்கு பிராண வாயு கிடைக்காது. இதன் விளைவால், அந்த நபரின் மூளைக்குப் பாதிப்பு ஏற்பட்டு, மயக்கம் உண்டாகி, தண்ணீரில் மூழ்கிவிடுவார். உயிரிழப்பார்.

எப்படிக் காப்பாற்றுவது?

நன்றாக நீந்தத் தெரிந்தவர்கள் மட்டுமே தண்ணீரில் மூழ்கியவர்களுக்கு முதலுதவி செய்ய முன்வர வேண்டும். நீச்சல் தெரியாதவர்கள் இதில் ஈடுபடக் கூடாது.

தண்ணீரில் மூழ்கியவரைக் காப்பாற்ற உதவும் முதலுதவி முறைகள் ஐந்து. அவை; அணுகுதல், கையால் இழுத்தல், எறிதல், கருவி கொண்டு இழுத்தல், அருகில் செல்லுதல். பாதிக்கப்பட்ட நபர் நினைவோடு இருக்கிறார், அதேநேரம் தண்ணீரில் தத்தளிக்கிறார் என்றால், அவருக்குக் கம்பு, கயிறு, களி, குச்சி, மரக்கிளை, வேஷ்டி, போர்வை, டவல் போன்றவற்றில் ஒன்றை நீட்டி, அதைப் பற்றிக்கொள்ளச் செய்து, அதை உங்கள் பக்கமாக இழுங்கள். இதை நீங்கள் செய்யும்போது, தண்ணீரில் தத்தளிக்கும் நபர், உங்களைத் தண்ணீருக்குள் இழுத்துவிடாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

பாதிக்கப்பட்ட நபர் எட்ட முடியாத தூரத்தில் இருக்கிறார் என்றால், தண்ணீரில் மிதக்கக்கூடிய பொருள்களில் ஒன்றை – எடுத்துக்காட்டாக, கார் டயர், காற்றடைத்த பெரிய பந்து, மர மிதவைகள், ஃபோம் மெத்தைகள் போன்றவற்றில் ஒன்றை அவரை நோக்கி வீசுங்கள். அதைப் பற்றிக் கொண்டு அவர் கரைக்கு மீண்டு வந்துவிடுவார். ஒருவேளை அந்த நபர் வெகு தொலைவில் இருந்தால், நீங்கள் நன்கு நீச்சல் தெரிந்தவராக இருந்தால், அவருக்கு அருகில் சென்று அவரைக் காப்பாற்ற கவனத்துடன் முயற்சி செய்யுங்கள்.

என்ன முதலுதவி செய்வது?

* தண்ணீரில் மூழ்கியவருக்குச் சுவாசம் உள்ளதா, நாடித்துடிப்பு உள்ளதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

* தண்ணீரில் மூழ்கியவர்கள் பெரும்பாலும் அதிகமாகத் தண்ணீர் குடித்து விடுவார்கள். நுரையீரலிலும் இரைப்பையிலும் தண்ணீர் நிரம்பிவிடுவதால் வயிறு வீங்கி, சுவாசிக்கச் சிரமப்படுவார்கள். ஆகவே, இந்தத் தண்ணீரை வெளியேற்றுவதற்கு, முதலுதவி செய்யும் நபர் வேகமாகவும் விவேகத்துடனும் செயல்பட வேண்டும்.

* தண்ணீரில் மூழ்கியவரைக் குப்புறப்படுக்க வைத்து, தலையைப் பக்கவாட்டில் திருப்பி வைத்துக்கொண்டு, முதுகையும் வயிற்றையும் அமுக்க வேண்டும். இவ்வாறு பத்து நிமிடங்களுக்குத் தொடர்ந்து செய்யவேண்டும்.

* அந்த நபருக்குச் சுவாசம் நின்றிருந்தால் அல்லது மூச்சுத் திணறல் இருந்தால், செயற்கை சுவாசம் தர வேண்டும்.

* இதயத்துடிப்பு நின்றிருந்தால் இதய மசாஜ் தர வேண்டும்.

* இதற்கு ‘இதய சுவாச மறு உயிர்ப்புச் சிகிச்சை’ (cardiopulmonary resuscitation – சுருக்கமாக – CPR) என்று பெயர்.

* இதைப் பள்ளியில் படிக்கும் போதே தெரிந்து வைத்துக்கொண்டால் நல்லது.

செயற்கை சுவாசம் தருவது எப்படி?

* அந்த நபரை மல்லாக்கப் படுக்க வைக்க வேண்டும்.

* அவருடைய பற்களுக்கிடையில் மரக்கட்டை அல்லது துணியைப் பல மடிப்புகளாக மடித்து வைத்து, வாயைத் திறந்தபடி வைத்துக் கொள்ள வேண்டும்.

* காற்று செல்லும் பாதை தடையில்லாமல் உள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

* முக்கியமாக, வாயில் அந்நியப் பொருள்கள் ஏதேனும் இருந்தால், அகற்றி விட வேண்டும்.

* பாதிக்கப்பட்டவரின் மூக்கை விரல்கள் கொண்டு மூடி, அவரது வாயில் முதலுதவி செய்பவரின் வாயை வைத்துக் காற்றை பலமாக ஊதி உள்ளே செலுத்த வேண்டும். இதனால், அவரது மார்பு உயரும். அப்போது முதலுதவி செய்பவர் வாயை எடுத்துவிட வேண்டும். மீண்டும் ஊத வேண்டும். இவ்வாறு நிமிடத்துக்கு 12 முறை ஊத வேண்டும்.

* குழந்தையாக இருந்தால் நிமிடத்துக்கு 30 முறை ஊத வேண்டும்.

இதய மசாஜ் தருவது எப்படி?

* சுவாசத்துக்கு வழி செய்யும் அதே நேரத்தில் இதயத் துடிப்புக்கும் வழி செய்ய வேண்டும். அந்த நபரின் நடு நெஞ்சில் முதலுதவி செய்பவரின் உள்ளங்கைகளை ஒன்றன்மேல் ஒன்றாக வைத்து, மார்பை பலமாக அழுத்த வேண்டும். நிமிடத்துக்கு 80 அழுத்தம் என்று மொத்தம் 15 முறை தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும். இதனால் இதயம் துடிக்க ஆரம்பிக்கும்.

* நான்கு சுழற்சிகள் இதய மசாஜ் செய்துவிட்டு, இரண்டு முறை செயற்கைச் சுவாசம் தர வேண்டும்.

* பாதிக்கப்பட்ட நபருக்கு சுவாசம் மற்றும் நாடித்துடிப்பு ஏறுபடும்வரை இதைத் தொடர வேண்டும்.

* அதேநேரத்தில் தாமதிக்காமல் மருத்துவச் சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போதுதான் தண்ணீரில் மூழ்கியவரை முழுமையாகக் காப்பாற்ற முடியும்.

* இதற்கு, பாதிக்கப்பட்ட நபரை 108 ஆம்புலன்ஸ் உதவியால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

Leave a Reply