பறவை வளர்ப்பில் பணம் சம்பாதிப்பது எப்படி. ஒரு சிறப்புக்கட்டுரை

15a பறவைகள் மனிதர்களுக்குப் பிடித்தமானவை. அதனாலேயே பலரும் தங்கள் வீடுகளில் தனியாக ஒரு குடில் அமைத்து பறவைகளை வளர்த்து வருகிறார்கள். மனத்துக்கு மகிழ்ச்சி தருகிறது என்பதற்காகவே பறவையை வளர்க்க ஆரம்பித்தவர்கள், இன்று அதன்மூலம் நல்ல வருமானமும் பார்த்து வருகிறார்கள்!

பண்ணை வைத்து வியாபாரம்!

கடந்த 16 ஆண்டுகளாகப் பறவைகளை வளர்த்து வியாபாரம் செய்வதையே தொழிலாகச் செய்து வருகிறார் ஈரோடு மாவட்டம் சத்திரம் புதூரைச் சேர்ந்த விவசாயி மூர்த்தி. அவர்கள் கூறுவதை கேட்போம்:

”பள்ளிப் படிப்பை முடித்தபின் சிறு பறவைகளைப் பிடித்து வளர்க்க ஆரம்பித்தேன். காலப்போக்கில் அதில் என் ஆர்வம் அதிகரிக்க பறவைகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதன் பிறகுதான்  பறவைகளை வளர்க்க ஏன் ஒரு பண்ணையை ஆரம்பிக்கக்கூடாது என்கிற யோசனை எனக்கு வந்தது. இன்று என்னிடம் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிளி மற்றும் புறா வகைகள் இருக்கின்றன. சாதாரண வகைப் புறாக் களில் இருந்து 15 லட்சம் ரூபாய் விலை மதிப்புள்ள மெக்கோ பறவை வகை களையும் வளர்த்து வருகிறேன்” எனப் பெருமைபொங்கப் பேசினார் மூர்த்தி.

15bபறவைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பது பற்றியும் விளக்கமாகச் சொல்ல ஆரம்பித்தார்.

”பொதுவாக, பறவை இனங் களைப் பொறுத்து அவற்றைத் தனித் தனியாகத்தான் வளர்க்க வேண்டும். இந்தச் செயல் அந்தந்த பறவைகளை அதன் குணாதிசயங்களுடன் வளர வழிவகுக்கும். பறவைகளுக்கான கூண்டுகளை அமைக்கும்போது, அதற்கான கூண்டின் அளவு, அதில் அடைக்க இருக்கும் ஜோடி பறவைகள் எண்ணிக்கையைப் பொறுத்து அமைக்க வேண்டும். மெக்கோ, காக்டோ ஆகியவைப் பெரியதாக வளரும். நீண்ட நாட்கள் வாழக்கூடியவை. எனவே, இவற்றை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். இவை மனிதர்களுடன் நன்கு பழகும் என்பதால் விலை அதிகமாக இருந்தாலும் பெரும்பாலானவர்கள் இவற்றை விரும்புகிறார்கள். இவற்றை வளர்க்க சற்று பெரிய கூண்டு தேவைப்படும். இவை குஞ்சு பொரிக்கும் பருவத்துக்கு வர 10 ஆண்டுகள் ஆகும்” என்றவர், பறவை இனங்களை பராமரிப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் சொன்னார்.

பராமரிப்பு முக்கியம்!

”புறா இனங்களைப் பொறுத்தவரை, பல வகைகள் உள்ளன. மயில்புறா, சிராஸ், கோழிப்பிடங்கு, கிங் ஆகியவற்றை வீட்டில் வளர்க்கலாம். இதில் மயில்புறா ‘லக்கான்’ என்று அழைக்கப்படும். இது மிகவும் அழகானது; நன்கு பழகும் தன்மை கொண்டது. இது ஒரு ஃபேன்சி ரகப் புறா. இதற்கு அதிகம் பறக்கத் தெரியாது. எனவே, வீட்டில் வளர்க்க ஏற்றது. இதில் பல வண்ணங்கள் உண்டு. இது ஒரு ஜோடி 1,000 முதல் 2,000 வரை விலை போகும். மாதம் ஒருமுறை குஞ்சு பொரிக்கக் கூடியது. இவற்றை சிறிய கூண்டுகளில் அடைக்கக்கூடாது. 25 ஜோடிகள் வரை 10ஜ்10 அளவுள்ள அறையில் வைக்கலாம். இதற்குத் தண்ணீர் மிக முக்கியமான ஒன்று. கம்பு, சோளம், கோதுமை, ராகி, பச்சை சோளம் போன்ற உணவுகளை அளிக்கலாம்.

கிங் புறாக்கள் பெயருக்கு ஏற்றாற் போல திறமையும் கவர்ச்சியும் வாய்ந்தவை. அதோடு மட்டுமல்லாமல், மிக நீண்ட தூரம் பறக்கும் தன்மை வாய்ந்தவை. சில சமயங்களில் 1,500 கி.மீ தூரம்கூட பறக்க வல்லது. இந்த இனப் புறாக்கள்தான் பந்தயத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு ஜோடி கிங் புறாக்கள் குறைந்தபட்சம் 10,000 ரூபாய் முதல் கிடைக்கும். இவையும் தானிய வகைகளை நன்கு உண்ணும்.

15லாபம் தரும் ஜோடிகள்!

கோழிப்பிடங்கு மற்றும் சிராஸ் ஆகியவை மாதம் ஒருமுறை ஒரு ஜோடி புறாக்கள் ஒரு ஜோடி குஞ்சு பொரிக்கும். இவை ஒரு ஜோடி 1,000 – 2,000 ரூபாய் வரை இருக்கும். இவை ஐந்து முதல் ஆறு ஆண்டுகள் வாழும் தன்மையுடையவை. இவற்றை வளர்த்தால் நன்கு லாபம் பார்க்கலாம். உணவுக்குப் பெரியதாக செலவு செய்யவேண்டியதில்லை. நாள் ஒன்றுக்கு 50 கிராம் உணவு போதுமானது.

கிளி வகைகளைப் பொறுத்தவரை, லவ் பேர்ட்ஸ் மற்றும் காக்டெயில் வகைகள் மக்களால் அதிகம் விரும்பி வாங்கப்படுகின்றன. இவை அனைத்தும் விலை மலிவானவை. லவ் பேர்ட்ஸில் ஒரு ஜோடி 250 ரூபாய் முதல் கிடைக்கும். அமெரிக்கன் லவ் பேர்ட்ஸ் ஜோடி 2,000 ரூபாய் முதல் கிடைக்கும். இவை திணை, அரிசி மற்றும் சோளம் ஆகியவற்றை உண்ணும். இதை வளர்ப்பதால் நல்ல லாபம் கிடைக்கும்” என்றார் மூர்த்தி.

புறாக்களே என் நண்பர்கள்!

அடுத்ததாக, புறா வளர்த்து வியாபாரம் செய்து வரும் சென்னையைச் சேர்ந்த அசோக் குமாரை சந்தித்தோம். ”புறாக்கள் என்றாலே அழகுதான். வெண்மை நிற புறாக்களைப் பார்க்கும்போதும், அதன் அசைவுகளைக் கவனிக்கும்போதும் நம் மனது லேஸாவதை உணரலாம். மனத்தில் இருக்கும் பாரம் மொத்தமும் காணாமல்போய்விடும்” என்று தான் வளர்க்கும் புறாக்கள் பற்றி பெருமையாகப் பேசினார் அவர்.

”ஒருநாள் சாலையில் நடந்து செல்லும்போது, புறா ஒன்று ரோடில் அடிபட்டு உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தது. அதை எடுத்து வந்து வளர்க்க ஆரம்பித்தேன். அதற்கு நன்றிக் கடன் போல எனக்கு இன்று நிறைய வருமானம் ஈட்டித் தருகின்றன புறாக்கள்.

என்னிடம் தற்போது எட்டு வகையான புறாக்கள் உள்ளன. அனைத்தும் ஜோடிப் புறாக்கள். புறாக்களை விற்பதன் மூலம் எனக்கு  மாதம் 4,000 வரை வருமானம் கிடைக்கிறது.

இன்றைய நிலையில் புறாக்கள் சுமார் 200 ரூபாயிலிருந்து 600 ரூபாய் வரை ரகத்துக்கு ஏற்றபடி விலை போகின்றன. என் நண்பர்கள், உறவினர்கள், நண்பர்களின் நண்பர்கள், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களே என் வாடிக்கையாளர்கள்.

புறாக்களை வாங்குபவர்கள் அதை நன்கு பராமரிப்பார்களா என்று விசாரித்து தெரிந்துகொண்ட பின்னரே அவர்களிடம் விலைக்குத் தருவேன். புறாக்கள் எனக்கு பணத்துக்கு பணத்தையும் மகிழ்ச்சிக்கு மகிழ்ச்சியையும் தருகிறது” என்றார்.

Leave a Reply