ஸ்மார்ட் ரேசன் கார்டு வாங்க என்ன செய்ய வேண்டும்?

ஸ்மார்ட் ரேசன் கார்டு வாங்க என்ன செய்ய வேண்டும்?

சென்னை மாவட்டத்தில் ஸ்மார்ட் ரேசன் கார்டு கிடைக்காதவர்கள் www.tnpds.gov.in என்ற இணைய முகவரியில் சென்று தேவையான பதிவுகளை பூர்த்தி செய்து விரைவில் அதனை பெற்றுக்கொள்ளலாம்.

சென்னை மாவட்டத்தில் பழைய குடும்ப அட்டைக்கு பதிலாக மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் சில குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் நாளது வரை பெறப்படவில்லை என அறியப்படுகிறது.

அவ்வாறு இது வரை மின்னணு குடும்ப அட்டைகள் கிடைக்கப் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் www.tnpds.gov.in என்ற இணைய முகவரியில் பயனாளர் நுழைவு பகுதியில் குடும்ப அட்டைக்கு பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணை பதிவு செய்து நுழையலாம். அவ்வாறு நுழைந்த உடன், பயனாளரின் செல்போன் எண்ணிற்கு கிடைக்கப் பெறும் கடவுச் சொல்லினை பதிவு செய்தால் திரையில் தோன்றும் மின்னணு குடும்ப அட்டை விபர மாற்றம் என்ற பகுதிக்கு சென்று குடும்ப தலைவரது புகைப்படம் மற்றும் இதர விவரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முறையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என தெரிந்து கொள்ளலாம்.

அவ்வாறில்லையெனில் புகைப்படம் பதிவேற்றம் செய்து விவரங்கள் திருத்தம் செய்ய வேண்டும். அதன் பின்னரே மின்னணு குடும்ப அட்டை அச்சிடப்படும். அட்டைதாரர்கள் வசதிக்கென கீழ்காணும் வழிமுறைகள் உள்ளது.
(1) அட்டைதாரர் அவர்தம் வசம் உள்ள இணைய வசதி வாயிலாக மேற்குறிப்பிட்ட www.tnpds.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது TNEPDS என்ற கைப்பேசி செயலியை பயன்படுத்தியோ திருத்தங்கள் மேற்கொண்டு புகைப்படத்தினை பதிவேற்றம் செய்யலாம்.

(2) அரசு இ-சேவை மையம் மூலமாகவும் திருத்தங்கள் மேற்கொண்டு புகைப்படத்தினை பதிவேற்றம் செய்யலாம்.

(3) இணைய வசதி இல்லாதவர்கள் அவர்தம் குடும்ப அட்டை இணைக்கப்பட்ட நியாய விலைக் கடைப்பணியாளரிடம் புகைப்படத்தை இதர விவரங்களுடன் குடும்ப அட்டை நகலில் ஒட்டி வழங்கலாம்.

(4) மேலும், அட்டைதாரரின் பகுதிக்குட்பட்ட உணவு பொருள் வழங்கல் உதவி ஆணையாளர் அலுவலகத்தில் புகைப்படத்தை இதர விவரங்களுடன் குடும்ப அட்டை நகலில் ஒட்டி வழங்கலாம்.

சரியான விவரங்கள் மற்றும் புகைப்படம் இல்லாது மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிடப்படாத அட்டைதாரர்கள் விபரம் நியாய விலைக் கடையில் ஒட்டி விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் பெயர் இடம் பெற்றிருப்பின் மேற்குறிப்பிட்ட வழி முறைகளில் ஏதேனும் ஒரு வழியினை பயன்படுத்தி விரைவில் மின்னணு குடும்ப அட்டை பெற இயலும்.

Leave a Reply