ஒரு டஜன் குழந்தைகளைப் பெற்றாலும், ஓவராக அலட்டிக்கொள்ளாமல் அவர்களை வளர்த்து ஆளாக்கிய தலைமுறை போயே போச்…! இது, ‘நாம் இருவர் – நமக்கு ஒருவர்’ காலம். அந்த ஒன்றை வளர்க்கவே மண்டை காய்ந்துபோகிறார்கள் பெற்றோர். அதிலும், ‘டீன் ஏஜ்’ பிள்ளைகளை ஹேண்டில் செய்வது பெற்றோர்களுக்கு மிகப் பெரிய சவாலாகவே இருக்கிறது.
இயற்கையிலேயே அதிகரித்திருக்கும் நுண்ணறிவுத்திறன் (ஐ.க்யூ.), நவீன வாழ்க்கை முறை மற்றும் டி.வி., லாப்டாப், ஆண்ட்ராய்ட் மொபைல் போன்ற, அசுர வேகத்தில் உலகையே அப்டேட் செய்யும் மின்னணுச் சாதனங்கள்… இவற்றுக்கிடையே, தங்கள் டீன் ஏஜ் பிள்ளைகளைப் பொறுப்பான மனிதர்களாக வளர்க்க ஒவ்வொரு பெற்றோரும் படும்பாடு வார்த்தைகளால் விவரிக்கமுடியாது. நெருப்பைச் சுமந்த கருப்பையாகத் தத்தளிக்கிறார்கள்.
டீன் ஏஜ் பருவம் அத்தனை பிரச்னைக்கு உரியதா… அவர்களைச் சரியான முறையில் கையாளுவது எப்படி… போன்ற பல்வேறு கேள்விகளுக்கும், சென்னையைச் சேர்ந்த மூத்த மன நல மருத்துவர் விஜய நாகஸ்வாமி அளித்த பதில்கள் இங்கே!
‘குழந்தைகள் எப்போது ‘விடலைப்பருவம்’ அல்லது ‘வளர் இளம்’ பருவத்துக்கு (adolescence) மாறுகிறார்கள்?’
‘பொதுவாக 13 முதல் 18 வயது வரை உள்ளவர்களைக் குறிப்பதற்காக ‘டீன் ஏஜ்’ என்று சொல்கிறோம். ஆனால், 12 வயதில் இருந்து, 20 வயது வரை உள்ளவர்களை ‘டீன் ஏஜர்ஸ்’ எனலாம். ஆனால், குழந்தைப் பிராயத்தில் இருந்து இளமைப் பருவத்துக்கு மாற்றம் நடைபெறும் ‘வளர் இளம் பருவம்’ (adolescence) என்பது, வழக்கமாக ஒரு குழந்தை பாலியல் ரீதியான முதிர்ச்சி அடையும்போதுதான் தொடங்குகிறது. முன்பெல்லாம், மாற்றம் நிகழும் ‘அடாலஸன்ட்’ பருவமும், ‘டீன் ஏஜ்’ பருவமும் ஒரே வயதில் அமைந்தன. அதைத்தான் ‘விடலைப்பருவம்’ என்றார்கள். ஆனால், இப்போதெல்லாம் ஆண்களோ, பெண்களோ… அவர்களின் டீன் ஏஜ்க்கு முன்னரே, அதாவது 9, 10 வயதிலேயே பாலியல் ரீதியான முதிர்ச்சியைப் பெற்றுவிடுவதால், ‘அடாலசன்ஸ்’ என்பது மிக இளம் வயதிலேயே தொடங்கிவிடுகிறது.”
‘வளர் இளம் பருவத்தில், உடல் அளவிலும் மனதளவிலும் குழந்தைகள் எதிர்கொள்ளும் மாற்றங்கள் என்ன?’
‘இரண்டாம் நிலை (secondary) பாலியல் குணங்களாகக் கருதப்படும் முதல்நிலை (primary) உடல் மாற்றங்கள் முக்கியமாக நிகழ்கின்றன. சிறுவர்களுக்கு உதட்டின் மேலும் உடலிலும் பூனை ரோமம் அரும்புதல், சிறுமிகளுக்கு மார்பக வளர்ச்சி, ரோம வளர்ச்சி போன்றவை.. இரு பாலருக்குமே, தசைத் திரட்சி அதிகமாகும். உடலில் கொழுப்புப் பரிமாற்றத்தில் இந்த மாற்றங்கள் நிகழும். குரல் மாறும். உயரம் அதிகமாகும். இனப்பெருக்க உறுப்பு வளர்ச்சிகளாலும் உடல் தோற்றத்தாலும் சிறுவர்கள் ஆண்களாகவும் சிறுமிகள் பெண்களாகவும், மெல்ல உருமாறுகிறார்கள். வளர் இளம் பிராயத்தினர், பிறர் சார்பின்றி, தன்னிச்சையாகச் செயல்படும் அளவுக்கு, அவர்களின் மனமும் எண்ணங்களும் வடிவமைக் கப்படுகின்றன. இந்த உலகில் அவர்களுக்கான வழியை அவர்களே தேர்வுசெய்து கொள்வதற்கும் ஒவ்வொருவரும் ஒரு தனித்தன்மையுடைய விசேஷமான ஆளுமையை மேம்படுத்திக்கொண்டு தனித்துவமான மனிதர் களாக உருவாக்கிக்கொள்வதற்கும் தேவையான மன மாற்றம் நிகழ்கிறது. மேலும் அவர்கள் உணர்வு ரீதியாக முதிர்ச்சி அடையும் செய்கையும் தொடங்குகிறது. ஆனால், இந்த மன முதிர்ச்சி, உடல் முதிர்ச்சி அளவுக்கு வேகமாக இருப்பது இல்லை. ஆனாலும், ஒரு முழுமை பெற்ற ஆண்/பெண்ணை உருவாக்க, இவை இரண்டுமே தேவைப்படுகின்றன.”
‘பிள்ளைகளின் உடல் மற்றும் மனநிலை மாற்றங்களுக்கேற்ப பெற்றோர்களும் மாறிக்கொள்ளவேண்டுமா? இந்தக் காலத்துப் பிள்ளைகளை மிகவும் கவனமாகக் கையாள வேண்டியிருக்கும் நிலையில், பெற்றோருக்கான அறிவுரை என்ன?’
‘சொல்லப்போனால், பெற்றோர்கள் தங்கள் கருத்துகளையும் முடிவுகளையும் பிள்ளைகளின் மேல் திணிப்பதை விட, அந்த வயதில் இயற்கையாக நிகழும் மாற்றங்களை அனுமதிப்பது மிகவும் நல்லது. ‘இளமை’ என்பது மிகவும் இயற்கையாக நடக்க வேண்டிய மாற்றம். ‘இந்த வயதில் இந்த மாற்றம் சாதாரணமானது தான்!’ என்று ஏற்றுக்கொள்ளவேண்டும். அந்தப் பருவத்தில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விஷயத்தில் தமக்கான எல்லையை வகுத்துக்கொள்ள வேண்டும். பிள்ளைகளாகக் கேட்டால் ஒழிய, அந்த எல்லையைத் தாண்டாமல் கைகளைக் கட்டிக்கொண்டு இருக்கவேண்டும். இப்போதைய இளைஞர்கள், தங்கள் பெற்றோர்களை விட அதிகமாக வெளி உலகைத் தெரிந்துகொண்டிருக்கிறார்கள். எனவே, பெற்றோர்கள் தங்களின் டீன் ஏஜ் வருடங்களை அவர்களுக்கான அளவுகோல்களாக வைக்கக்கூடாது. மொத்தத்தில், புரிதலும் பொறுமையும்தான் தேவை!”
‘இந்தத் தலைமுறையினர் மிகவும் ‘சென்சிடிவ்’ ஆக இருக்கிறார்கள். அவர்கள் தவறு செய்யும்போது எப்படிக் கட்டுப்படுத்துவது?’
‘இந்தக் ‘கட்டுப்படுத்த முயற்சிக்கும்’ யோசனையில் இருந்து முதலில் நாம் வெளியே வர வேண்டும். நாம் செய்ய வேண்டியது என்ன என்றால், அவர்களைத் தவறு செய்ய விட்டு, அவர்கள் விழும்போது எழுவதற்கு நாம் உதவ வேண்டும். மேலும் அவர்கள் செய்யும் ஒவ்வொரு தவறில் இருந்தும், ஒரு பாடம் கற்கிறார்கள் என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும். பெரிய பெரிய லெக்சர் கொடுக் காமல், மிக இயல்பாக அவர்களைத் தட்டிக் கொடுத்து, சரியான வழியில் திருப்பவேண்டும்.’
‘அளவுக்கு அதிகமான சுதந்திரமும் பிள்ளைகளைக் கெடுத்துவிடுகின்றதே! ஓர் உளவியல் மருத்துவராக, அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய சுதந்திரத்தின் அளவை ‘பிரிஸ்கிரைப்’ செய்ய முடியுமா?’
‘ ‘இதுதான் சரியானது’ என்று சுதந்திரத்துக்கான அளவை நிர்ணயிக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஒரு டீன் ஏஜ் பிள்ளைக்கு நாம் கற்பிக்க வேண்டியதெல்லாம், அவர்களாகவே முடிவுகளை எடுக்கும் அளவுக்கு பொறுப்புணர்வை வளர்த்துக்கொள்ளும் திறனைத்தான். அந்த அளவுக்கு சக்தியும் அதிகாரமும் அவர்களுக்கு உண்மையிலேயே கிடைக்கும்போதுதான், இதைச் சாதிக்க முடியும். ஆனால் அவர்களுக்கான எல்லா விஷயங்களையும் நாமே தீர்மானித்துக்கொண்டு இருந்தால், நிச்சயம் ஒரு நாள் அவர்களிடமிருந்து பயங்கர எதிர்ப்பு கிளம்பும். ஆனால், அதற்குக் காரணம் தாம்தான் என்பதை அறியாத பெற்றோர்கள், பிள்ளைகளின் எதிர்ப்பை மட்டும் விரும்புவதில்லை.’
‘பொதுவாக டீன் ஏஜ் பிள்ளைகள், மற்றவர்கள் குறை சொல்வதை விரும்புவதில்லை. இந்த மாதிரியான சூழலில், தவறான வழிகளில் செல்லும் இளைய தலைமுறையை எப்படி நல்ல வழிக்குத் திருப்புவது? எப்படித் திருத்துவது?’
‘தங்களின் டீன் ஏஜ் குழந்தைகள், தவறு செய்தவர்களா, செய்யாதவர்களா என்று அறிவிக்க பெற்றோர்கள் ஒன்றும் நீதிமன்றங்கள் இல்லையே! மேலும், ஒரு குறிப்பிட்ட வழிதான் ‘நல்ல வழி’ என்பதை யார் முடிவு செய்வது? பெரும்பாலான பெற்றோர்களின் (டீன் ஏஜ் பிள்ளைகளைப் பற்றிய) கவலை எல்லாம், பாலியல் உறவுகள் மற்றும் பிரச்னைகளை மையப்படுத்தியேதான் இருக்கின்றன. டீன் ஏஜ் பிள்ளைகள், எதிர் பாலினத்தாரோடு ஏதாவது ஒரு விஷயத்தில் தொடர்புவைத்திருந்தாலே, உடனே அது பாலின ரீதியான தவறுகளுக்குக் கொண்டுபோய் விட்டுவிடுமோ என்றுதான் கவலைப்படுகிறார்கள். இந்தப் பிரச்னைக்குத் தீர்வு என்னவென்றால், பாலியல் உறவு குறித்தும், பாலியல் ரீதியான விஷயங்கள் குறித்தும் நாமே நம் குழந்தைகளுடன் பேசி, விவாதித்துத் தெளிவுபடுத்துவதுதான்.”
‘விடலைப்பருவத்தில் அதீத சுறுசுறுப்பு மட்டுமல்லாமல், வன்முறையையும் கையில் எடுக்கும் சில முரட்டுப் பிள்ளைகளை வழிக்குக் கொண்டுவருவது எப்படி?
”ஆண்களுக்கான ஹார்மோன் டெஸ்டோஸ்டிரோன், பாலியல் உணர்வுகள் மேம்படுவதற்கும் முரட்டுத்தனமான நடத்தைக்கும் நெருங்கிய தொடர்புகொண்டிருக்கிறது. அந்த ஹார்மோன் சுரக்கும் வளர் இளம் பருவத்தில், அதீதமான முரட்டுத்தனத்துக்கு வாய்ப்பு இருக்கிறது. உடற்பயிற்சிகள், கால்பந்து, தற்காப்புக்கலைகள் அல்லது கடினமான வேலையில் ஈடுபடுவது, முரட்டுத்தனத்தைத் திசைமாற்றும் வடிகாலாக அமையும்.’
டீன் ஏஜ் பிள்ளைகளின் பெற்றோருக்கு:
‘வளர் இளம் பருவம்’ என்றாலே, அவர்கள் எண்ணம் எல்லாம் பாலியல் உறவு பற்றி மட்டும்தான் என்று நினைக்காதீர்கள். அதற்கு மேலே, படிப்பு, வேலை, நட்பு என எவ்வளவோ அந்தப் பருவத்தில் இருக்கிறது.
அந்தப் பருவத்தில், உங்கள் மகன்/மகள் உங்களுக்கு முன்னுரிமை தரவேண்டும் என எதிர்பார்க்காதீர்கள்.. ஏனெனில், இந்தக் கட்டத்தில் அவர்களின் சகாக்களும் தோழர்களும்தான் அவர்களுக்கு மிகவும் முக்கியமானவர்கள்.
உங்களுக்கு ஏற்புடையதாக இல்லை என்றாலுமே கூட, அவர்களின் எண்ணங்கள், பார்வைகள், நம்பிக்கைகள், கொள்கைகள் ஆகியவற்றுக்கு மதிப்பு அளியுங்கள். ஏனெனில், உங்கள் நம்பிக்கைகளையும் கருத்துகளையும் எவ்வளவு ஆழமாக அவர்களில் விதைக்க முயற்சிக்கிறீர்களோ, அதைவிட அதிக ஆழமாக அதைத் தடுக்கவும் எதிர்க்கவும் செய்வார்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
அவர்களின் கொள்கைகளை ‘நடைமுறைக்கு சரிப்பட்டு வராது’ என்று நிராகரிக்காதீர்கள். அவற்றில் எது சரியாக இருக்கும், எது சரிப்படு வராது, அது ஏன் என்பதைத் தெளிவாக, காரணங்களுடன் சொல்லுங்கள்.
அவர்கள் மேல் நம்பிக்கை வையுங்கள். ஏனெனில், சிறு குழந்தையாக இருந்தபோது நீங்கள் போதித்த எவற்றையும் அவர்கள் உதாசீனப்படுத்தவில்லை. அந்தப் பாடங்கள் எல்லாம் அவர்கள் மனதின் ஆழத்தில் பசுமையாக இருக்கிறது. பிரச்னை வரும்போது, அவற்றை உபயோகப்படுத்துவார்கள்.
உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய திட்டங்களை அவர்கள் சார்பில் நீங்கள் திட்ட மிடாதீர்கள். அவர்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும் என எதிர்பார்ப்பார்கள்.
போதைப்பொருள்களுக்கு மட்டும் எப்போதுமே அவர்கள் ‘நோ’ சொல்லுமாறு வலியுறுத்துங்கள். ஏனெனில், வெளியுலகத்தில் அவர்கள் சந்திக்கும் மிகப் பெரிய பயங்கரம் அதுதான்.
பிள்ளைகளின் நண்பர்களை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும், அந்த நண்பர்களை வெட்டிவிட்டு, விலகுமாறு கட்டாயப்படுத் தாதீர்கள். அவர்களாகவே புரிந்து கொண்டு விலகட்டும்.