உடலின் ஆரோக்கியம் உதட்டில் தெரியும். நம் உடலில் என்ன நோய் இருந்தாலும், அது நம் முகத்தில் தெரியும். அதிலும் முக்கியமாக உதடுகளை வைத்துக் கண்டுபிடித்துவிடலாம்’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த தோல் மருத்துவர் முருகு சுந்தரம். உதடு ஏன் கருப்பாகிறது, ஏன் வெடிக்கிறது, உதட்டை அழகாகவைத்துக்கொள்வது எப்படி என அவரிடம் கேள்விகளை அடுக்கியபோது வந்த பதில்தான் இது.
‘உதடுகள் வறண்டுபோவதற்கு முக்கியக் காரணம் போதுமான ஈரப்பதத்தைத் தேக்கிவைக்க முடியாமல்போவதுதான். குளிர்காலத்தில் காற்றின் ஈரப்பதம் குறைவதால் உதடு வறண்டுபோகும். போதுமான அளவு நீர் அருந்தாமல் இருப்பது, புறஊதாக்கதிர்களின் பாதிப்பு போன்ற காரணங்களாலும் உதடுகள் பாதிக்கப்படுகின்றன.
ரசாயனம் கலந்த லிப்ஸ்டிக், க்ரீம்களைத் தடவுவதால் உதடுகளில் ஒவ்வாமை ஏற்படலாம். வேசலின், விளக்கெண்ணெய் போன்றவைகூட சிலருக்கு ஒவ்வாமையைத் தரும். இது வெடிப்பாகவோ, புண்களாகவோ இருக்கும். சிலருக்கு உதடு கருமை ஆவதற்கும் உதட்டில் ஏற்படும் அலர்ஜியே காரணம். சிகரெட் பிடிப்பவர்கள், நிக்கோட்டின் கலந்த போதைப் பொருட்களை எடுத்துக் கொள்வதாலும் உதடு கருப்பாகிறது. ஆண்கள் மீசைக்கு டை அடிப்பதாலும் உதடு கருமையாகக் கூடும். தவிர, சர்க்கரை நோய், தைராய்டு சுரப்பில் குறைபாடு, ஆட்டோ இம்யூன் பாதிப்பு, பால்வினை நோய்கள் போன்ற சில வகை நோய்களின் அறிகுறியாலும் உதட்டில் அலர்ஜியும் கருமையும் காணப்படலாம்.
உதடுகளில் ஈரப்பதத்தைத் தக்கவைக்க, எண்ணெய் போன்ற திரவம் சுரக்கிறது. ஹார்மோன் தூண்டுதலின் காரணமாக இந்த எண்ணெய் சுரக்கிறது. ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு இருபாலருக்கும் தானாகவே ஹார்மோன் மாற்றங்களால், உதடு கருமையாகத் தெரியும். அதேபோல், பதின் பருவத்தில் உதடு சிவப்பு நிறத்தில் இருப்பதற்கும் ஹார்மோன்கள் தான் காரணம்.
உதடு கருமையாக இருப்பதற்கும், புண்கள் வருவதற்கும் என்ன காரணங்கள் என்பதை டாக்டரிடம் காண்பித்து பரிசோதித்துக்கொள்ள வேண்டும். வேதிப்பொருள்களால் உதட்டில் அழற்சி ஏற்படுகிறதா என்பதை ‘பேட்ச்’ பரிசோதனை மூலம் தெரிந்துகொள்ளலாம். இதனால் பாதிப்பு ஏற்படவில்லை என்றால், வேறு ஏதேனும் நோய் பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிந்து அதன் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படும்’ என்றார்.
உதடு வறண்டுபோகாமல் இருக்க
உதடு வறண்டு இருந்தால், உடனே பல்லால் உதட்டை கடித்து
தோலை பிய்க்கக் கூடாது. அந்த நேரத்தில் அதிக நீர் பருக வேண்டும்.
நல்லெண்ணெய், வெண்ணெய் தடவுவது உதடு கருமையாவதைத் தடுக்கும்.
சன் ஸ்க்ரீன் கலந்த லிப் மாய்ஸ்ச்சரைசர் (lip moisturizer) தடவலாம்.
நாக்கால் அடிக்கடி உதட்டை ஈரப்படுத்தக் கூடாது.