குழந்தை வளர்ப்பு, இன்றைய இளம் பெற்றோருக்கு ஒரு புதிர். அழும் குழந்தையைச் சமாதானப்படுத்த முடியாமல் பசிக்கு அழுகிறதா… தூக்கத்துக்கு அழுகிறதா? என்று தெரியாமல் விழிபிதுங்கிப் போகின்றனர்.
அம்மா, பாட்டி, அத்தை… போன்றோர் நிறைந்திருந்த கூட்டுக் குடும்பம் மறைந்து போனதன் விளைவுதான் இதற்குக் காரணம். பாட்டி, அம்மாவிடம் இருந்து குழந்தை வளர்ப்பு ரகசியங்கள் மகளுக்கு இயற்கையாகவே கடத்தப்பட்டன. ஆனால், இப்போது அப்படி இல்லை. நகர்புறங்களில், கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பத்தில் இரண்டு வயது வரை குழந்தையை வளர்ப்பது என்பது மிகவும் கடினம். பொதுவாக, பச்சிளம் குழந்தை வளர்ப்பில் புதுப் பெற்றோர்கள் செய்யும் தவறுகள் பற்றி குழந்தைகள் நல மருத்துவர் எஸ்.பழனிச்சாமியிடம் கேட்டோம்.
பால் புகட்டுதல்
குழந்தைக்கு இரண்டு முதல் மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை பால் புகட்ட வேண்டும். இதனால், சில தாய்மார்கள் இரவிலும் குழந்தையை எழுப்பி பால் புகட்டுவார்கள். இது தேவையில்லை. பொதுவாக ஆறு வாரத்திலேயே குழந்தைக்கு, பால் அருந்தும் நேரம், தூங்கும் நேரம் என ‘ரிதம் செட்’ ஆகிவிடும். எனவே இரவில் பசிக்கு அழுதால் மட்டும் பால் புகட்டினால் போதும். குழந்தைக்கு ஆறு மாதம் வரை தாய்ப்பாலே போதும். தனியாக தண்ணீர் தர வேண்டியது இல்லை. ஆறு மாதத்துக்குப் பிறகு பால் அருந்தியதும் சிறிது காய்ச்சி வடிகட்டிய தண்ணீர் குடிக்கச் செய்யலாம்.
அவ்வப்போது, குழந்தை நல மருத்துவரை அணுகி, குழந்தைக்கு அந்தந்த மாதத்துக்கான வளர்ச்சி இருக்கிறதா என்று பரிசோதித்துக்கொள்ளுங்கள். வளர்ச்சி குறைவாக இருந்தால் டாக்டரின் ஆலோசனை பெற்று அதன்படி செயல்படுவது நல்லது.
வாய் பராமரிப்பு
பச்சிளம் குழந்தைதானே என்று பெற்றோர்கள் குழந்தையின் வாய் பராமரிப்பைப் புறக்கணிக்கிறார்கள். பல் முளைக்காதபோதும் வாய் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். குழந்தைக்குப் பால் புகட்டியதும் மென்மையான துணியை வெதுவெதுப்பான நீரில் நனைத்து குழந்தையின் ஈறுகளையும், வாயை¬யும் துடைக்க வேண்டும். ஃபுளோரைட் குழந்தைக்கு மிக அவசியமான தாது உப்பு. அது நீரில் போதுமான அளவு இருக்கிறது.
தூக்கம்
இரவில் தூக்கம் கெட்டுவிடக்கூடாது என்பதற்காகக் குழந்தையின் தூக்கப் பழக்கத்தை மாற்றுகிறேன் என்று சில தாய்மார்கள், பகலில் நீண்ட நேரம் குழந்தையை விழித்திருக்க முயற்சிப்பார்கள். குறைந்தது, ஓராண்டு வரையில் இந்தப் பழக்கத்தை முயற்சிக்காதீர்கள். அதிகச் சோர்வும்கூட, குழந்தையின் தூக்கத்தைக் கெடுத்துவிடக்கூடும். குழந்தை எப்போதெல்லாம் தூங்க விரும்புகிறதோ அப்போது அதைத் தூங்க வைத்துவிடுங்கள்.
பேச அனுமதியுங்கள்
குழந்தைகள் வார்த்தைகளை பேச ஆரம்பிப்பதற்கு முன்னரே மொழியைக் கண்டறியவும், கற்கவும் முயற்சிக்கின்றன. அதனால் பெற்றோர்கள் பொருளற்ற ஓசைகளை எழுப்புவதைக்காட்டிலும் குழந்தைகளிடம் பேச வேண்டும். ஒன்றிரண்டு வார்த்தைகளைச் சொல்லச்சொல்ல அந்த வார்த்தைகளைப் பேச குழந்தை முயற்சிக்கும். நாம் பேசும்போது நம்முடைய வாய் அசைவு, முக அசைவுகளை குழந்தை உற்றுநோக்கும். இதன்மூலம் குழந்தையின் மொழி திறன் மேம்படும். எனவே, குழந்தைக்குப் புரியவில்லை என்றாலும்கூடத் தொடர்ந்து பேசுங்கள். குழந்தையின் கண்ணைப் பார்த்துப் பேசுவதும், அதன் கவனத்தை ஈர்த்து, பேசத்தொடங்கும்.
உறவுகளுடன் உறவாட விடுங்கள்!
வேற்று முகம் அறியாதாது மழலை. யார் கூப்பிட்டாலும், சிரித்தபடியே ஓடிவரும். ஆனால், வளர வளர, பெற்றோரைத் தவிர, வேறு யாரிடமும் ஒட்டாது. குழந்தைக்கு, சமூகத்துடனான உறவாடல் இல்லாமல் இருப்பது நல்லது அல்ல. இதனைத் தவிர்க்க, அக்கம்பக்கத்தினரிடம் பழக விடுங்கள். நிறையக் குழந்தைகளைப் பார்த்ததும் குழந்தை துள்ளிக் குதிப்பதைப் பார்க்க முடியும். பாட்டி, அத்தை, சித்தி என்று வாரம் அல்லது மாதம் ஒரு முறை உறவினர்களிடம் கொண்டுவிடுங்கள். உறவுகளின் உன்னதத்தை உணர்ந்து, குழந்தை பல நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்ளும்.